ஆவடி, ஆவடியில் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டதால், முதியோர் மற்றும் பெண்கள் அவதிப்பட்டனர்.
ஆவடி அரசு பேருந்து நிலையத்தில் இருந்து கிராமப்புற பகுதிகளான வெள்ளானுார், மோரை, பம்மதுகுளம், ஆலத்துார், பாலவேடு, மிட்டனமல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று குடியரசு தினம் என்பதால் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் பல்வேறு தேவைகளுக்காக ஆவடி சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்த நுாற்றுக்கும் மேற்பட்ட முதியோர் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டனர்.
மேலும், நண்பகல் 12:00 மணி முதல் பேருந்துகள் இல்லாததால், இருக்கை வசதி இல்லாமல் பல மணி நேரம் நடைபாதையில் அமர்ந்து, வெயிலில் காத்திருந்தனர்.
அதன் பிறகு வந்த ஓரிரு பேருந்துகளில் பெண்கள், முதியோர்கள் முண்டியடித்து ஏறிச் சென்றனர்.
விடுமுறை நாள் என்றாலும் கூட, பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்க, சம்பந்தப்பட்ட ஆவடி பேருந்து நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.