சென்னை:சென்னை பல்கலையில் நடந்த கருத்தரங்கில், ஜனநாயகம் மற்றும் சமூக நீதி குறித்து, நிதி அமைச்சர் தியாகராஜன் பேசும்போது, மின் தடை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பல்கலையின் சட்ட படிப்பு துறை சார்பில், 'ஜனநாயகம் மற்றும் சமூக நீதியில் ஒருமித்த கருத்தும் சர்ச்சைகளும்' என்ற தலைப்பில், இரண்டு நாள் கருத்தரங்கு நேற்று நடந்தது. துணை வேந்தர் கவுரி தலைமை வகித்தார்.
இட ஒதுக்கீடு
அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது:
சமூக நீதியை பாதுகாக்கும் திட்டங்கள் மற்றும் அதில் ஈ.வெ.ராமசாமியின் திராவிடர் கழகம் மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் பங்களிப்பு குறித்து, சில முக்கியமான விளக்கங்கள் அளிக்க விரும்புகிறேன்.
தமிழகத்தில், 1921ல் நீதிக் கட்சி ஆட்சி அமைத்தது. அப்போது, ஈ.வெ.ரா., நீதிக் கட்சியில் இல்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.
பெண்களுக்கு கட்டாய ஓட்டுரிமை, கட்டாய தொடக்க கல்வி உரிமை, ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு ஆகிய சமூக நீதியை காக்கும் முக்கிய முடிவுகள், நீதிக் கட்சி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டவை.
இந்த முடிவுகள், ஈ.வெ.ராமசாமி காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறும் முன், நீதிக் கட்சி ஆட்சியில் நடந்தவை. இவற்றை யாரும் மறந்து விடக் கூடாது.
எனவே, அப்போதைய நீதிக் கட்சி தலைவர்கள், சுயமரியாதை இயக்கத்துக்கு முன்பே சமூக நீதியை காத்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழில் அர்ச்சனை
இந்திய அரசியலமைப்பை நாம் செயல்படுத்தும்போது, மக்களுக்கு ஓட்டுரிமை வாயிலாக பொறுப்புடைமையும், உரிமையும் இருக்கிறது.
ஒவ்வொருவரையும் சமமாக நடத்த வேண்டும் என வடிவமைக்கப்பட்டதே, இந்திய அரசியலமைப்பு. அது தான் சமூக நீதி.
அமெரிக்காவில் ஒரு காலத்தில் பிராட்டஸ்டன்ட், கத்தோலிக்கர், ஆப்ரிக்கன், அமெரிக்கன் என, பாகுபாடு இருந்தது. தமிழகத்தை எடுத்துக் கொண்டால், ஜாதி ரீதியாக ஒவ்வொருவரும் பிரிக்கப்பட்டனர்.
நீதிக் கட்சி ஆட்சிக்கு பின், காங்கிரஸ் மற்றும் சுதந்திரா கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்த பின், அவை திராவிட தத்துவங்களையே பின்பற்றின. அதைத் தான், நாடு முழுதும் காங்கிரஸ் தத்துவமாக்கினர்.
நீதிக் கட்சி ஆட்சியிலும், ராஜாஜி மற்றும் பக்தவத்சலம் ஆகியோர் ஆட்சியிலும், கோவில்கள் அதிக அளவில் நாட்டுடைமை ஆகின. தமிழில் அர்ச்சனை செய்வது ஊக்கப்படுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் பேசும்போது, அரங்கில் திடீரென மின் தடை ஏற்பட்டது. அதனால், 'மைக்' வேலை செய்யவில்லை. அரங்கின் விளக்குகளும் அணைந்து, அரங்கம் கும்மிருட்டாக மாறியது. அதனால், அமைச்சர் தியாகராஜன் தன் உரையை தொடராமல் மைக் முன், சில நிமிடங்கள் அமைதியாக நின்றார்.அப்போது, கூட்டத்தில் இருந்த மாணவர்கள், பேராசிரியர்கள் தங்களின் மொபைல் போனில் உள்ள 'டார்ச்' பயன்படுத்தி, வெளிச்சம் ஏற்படுத்தினர்.
இதையடுத்து, இருக்கைக்கு சென்று அமர்ந்த அமைச்சர், பின், சில நிமிடங்களில் மின் வினியோகம் வந்ததும், மீண்டும் பேச்சை தொடர்ந்தார்.அப்போது, அவர் பேசியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை இதுபோன்ற மின் வெட்டு பிரச்னை கிடையாது. டில்லி ஜே.என்.யு., பல்கலையில் மாணவர் நிகழ்ச்சிக்காக மின் தடை ஏற்படுத்தியது போன்று இங்கு இருக்காது. இந்த மின் தடையில் வேறு சதி இருக்காது. ஆனாலும், சமூக நீதி மற்றும் ஜனநாயகம் குறித்து பேசும்போது, மின் தடை ஏற்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.இவ்வாறு அவர் பேசினார்.