திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாணவியர் தேசிய கீதம் இசைத்த போது, மேயர், கமிஷனர் உள்ளிட்டோர் எழுந்திருக்காமல் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி வளாகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், மேயர் சரவணன், துணைமேயர் ராஜு, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கொடியேற்றிய பின், மேயர், துணை மேயர், கமிஷனர் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். அப்போது மாணவியர் பேண்ட் வாத்தியம் இசைத்து தேசிய கீதம் பாடினர்.
தேசிய கீதம் இசைக்கப்படும் போது அதிகாரிகள் எழுந்திருக்காமல் இருக்கைகளில் அமர்ந்திருந்த, 'வீடியோ' பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கொடியேற்றிய பின் மாணவியர் தேசிய கீதம் இசைத்ததை மேடையில் இருந்தவர்கள் கவனிக்கவில்லை. வேண்டுமென்றே தேசிய கீதத்தை அவமதிக்கவில்லை' என்றார்.