தென்காசி:தென்காசியில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கணவரை தாக்கி பெற்றோர் கடத்தி சென்றனர். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத குற்றாலம் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
தென்காசி அருகே செங்கோட்டையில் வசிப்பவர் நவீன் பட்டேல். குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் பல ஆண்டுகளாக செங்கோட்டையில் மரக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கிருத்திகா பட்டேல் 23. கிருத்திகாவும் தென்காசி குத்துக்கல்வலசையை சேர்ந்த வினித் 24 என்பவரும் பள்ளியில் படிக்கும் போதிருந்து காதலித்துள்ளனர். வினித் மென்பொருள் பொறியாளராக சென்னையில் பணியாற்றுகிறார்.
டிசம்பர் 27ல் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கன்னியாகுமரியில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தென்காசியில் வினித்தின் பெற்றோர் வீட்டில் வசித்தனர். கிருத்திகாவை பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி வினித்துக்கு மிரட்டல்கள் வந்தன. எனவே ஜனவரி 4ம் தேதி இருவரும் குற்றாலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் சென்று புகார் செய்தனர்.
கிருத்திகாவின் தந்தை நவீன்படேல் தரப்பை அழைத்து இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் பேசினார். இருவரும் மேஜர் என்பதால் அவர்களை துன்புறுத்தக் கூடாது என இரு தரப்பிலும் கடிதம் எழுதி வாங்கி அனுப்பினார்.
ஜன.14 ல் கிருத்திகாவை மருத்துவமனைக்கு காரில் அழைத்து செல்லும்போது டூவீலர்களில் வந்து கார் மீது மோதிய ஒரு கும்பல் அவர்களை தாக்க முயற்சித்தனர். கிருத்திகாவும் வினித்தும் அங்குள்ள மரக்கடைக்குள் புகுந்து தப்பி ஓட முயற்சித்தனர். அங்கு சென்ற நவீன் படேல் தரப்பினர் இருவரையும் கடுமையாக தாக்கினர்.
தனிப்பிரிவில் புகார்
எனவே இருவரும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினர். மீண்டும் அலெக்ஸ் இரு தரப்பையும் அழைத்து விசாரித்தார். ஏன் முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் செய்தீர்கள் என வினித்திடம் கடுமையாக நடந்துள்ளார்.
ஜன.,25 ல் அவர்களை குற்றாலம் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்துள்ளார். அங்கிருந்து வெளியே வந்த போது ஒரு கும்பல் கிருத்திகாவை காரில் கடத்திச் சென்றது. வினித்தும் அவரது தந்தையும் தாக்கப்பட்டனர். இதுகுறித்து புகார் அளித்தும் குற்றாலம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. வினித் தரப்பில் டி.ஐ.ஜி.யிடம் புகார் அளிக்கப்பட்டது.
விசாரணை நடத்திய டி.ஐ.ஜி., பிரவேஷ்குமார், அலெக்சை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
நவீன் படேல், அவரது மனைவி, கார் டிரைவர், மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் உட்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். யாரும் கைது செய்யப்படவில்லை.