கோபி,-நம்பியூர் சுடுகாட்டில் குவித்துள்ள குப்பைக்கு தீ வைப்பதால், மூச்சுத்திணறலால் மக்கள் அவதியுறுகின்றனர்.
நம்பியூர் டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை, இருகாலுார் சாலையில் உள்ள நம்பியூர் சுடுகாட்டில், டவுன் பஞ்., நிர்வாகம் குவிக்கிறது. குப்பைக்கு அவ்வப்போது தீ வைத்து எரிப்பதால், சுடுகாடு வளாகம் முழுக்க புகைமூட்டமாகிறது. அவ்வழியே தினமும் நடைபயிற்சி செல்வோர் மூச்சுத்திணறலால் அவதியுறுகின்றனர். இதனால் பலர் நடைபயிற்சி பாதையை பலர் மாற்றி விட்டனர்.தவிர, சுடுகாடு வளாகத்தில், குப்பையை தீ வைத்து எரிப்பதால், நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் பாதிக்கின்றனர். குப்பையை தீ வைத்து எரிப்பதை, டவுன் பஞ்., நிர்வாகம் தவிர்க்க, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து டவுன் பஞ்., தலைவர் செந்தில்குமார் (தி.மு.க.,) கூறியதாவது: குப்பை கொட்ட இடமில்லாததால், சுடுகாட்டு வளாகத்தில் முன்பு குப்பை கொட்டப்பட்டது. தற்போது வளம் மீட்பு பூங்காவில், குப்பைகளை தரம் பிரிக்கிறோம். குப்பைக்கு தீ வைப்பதை தடுக்க ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.