கரூர்,- கோவையில் இருந்து கரூர் வழியாக, மயிலாடுதுறைக்கு இயக்கப்படும், ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் வழங்க வேண்டும் என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு, செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில், ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. கோவையில் காலை, 7:10 மணிக்கு புறப்படும் ரயில், இருங்கலுாரில், 7:29க்கும், திருப்பூரில் 7:48க்கும், கரூரில், 9:23க்கும், திருச்சியில், 10:55 க்கும், தஞ்சாவூரில், 11:43க்கும், பாபநாசத்தில் மதியம், 12:08க்கும், கும்பகோணத்தில், 12:23 க்கும், மயிலாடுதுறைக்கு, 1:40க்கும் சென்றடைகிறது.சொகுசு இருக்கைகள் கொண்ட, இந்த ரயிலில் முன்பதிவு செய்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும். முன்பதிவு செய்யாமல், இந்த ரயிலில் பயணம் செய்ய முடியாது. இதனால், கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த, பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.இதுகுறித்து, ரயில் பயணிகள் கூறியதாவது: கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்திவு செய்யும் பயணிகள் சென்றாலும், பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே உள்ளன. ஆனால், முன்பதிவு செய்யாமல் இந்த ரயிலில் பயணம் செய்ய முடியவில்லை. அதிவேகத்தில் செல்லும் இந்த ரயில், 364 கிலோ மீட்டரில், 8 ஸ்டேஷன்களில் மட்டும் நின்று செல்கிறது. தமிழகத்தில், பஸ் கட்டணம் அதிகமாக உள்ள நிலையில், முன்பதிவில்லாத டிக்கெட் வாங்கி பயணம் செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணம் செய்யும் நாளில், முன்பதிவு செய்யும் போது, சீட் இல்லை என்ற தகவல் இணையதளத்தில் உள்ளது. ஆனால், ரயிலில் இருக்கைகள் காலியாகவே உள்ளன.இதனால், முன்பதிவில்லாத டிக்கெட்டை வினியோகம் செய்துவிட்டு, ரயிலில் பரிசோதகர் மூலம் கூடுதலாக, 15 ரூபாய் முன்பதிவு கட்டணம் வசூலிக்கலாம். அதன் மூலம், ரயில்வே துறைக்கும் கூடுதலாக வருமானம் கிடைக்கும். இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், அனைத்து தரப்பு பயணிகளுக்கும், பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.