குளித்தலை,-குளித்தலை அருகே, மேலகுட்டப்பட்டியில் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இக்கோவிலில் விநாயகர், முருகன், அக்னி பாப்பாத்தி அம்மன், பனையடியான் தேரடி கருப்பு, மதுரை வீரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் உள்ளன. இந்நிலையில், கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய ஊர் மக்கள் முடிவு செய்து, புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். கடந்த 25ம் தேதி, காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு, கும்பத்துக்கு சிவாச்சாரியார்கள் யாக வேள்வி பூஜை செய்தனர். நேற்று 2ம் கால யாக வேள்வி நிறைவடைந்ததும், கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர், சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில், வைகைநல்லுார், மணத்தட்டை பஞ்., கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள், கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.