கிருஷ்ணராயபுரம்,-கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப் பகுதியில், ஆம்லெட்டில் மண்ணெண்ணெய் வாடை வீசியது குறித்து கேள்வி எழுப்பியதால், ஹோட்டல் பணியாளர்களுக்கும், உணவருந்தியவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஒரு உணவகத்தில், மஞ்சமேட்டை சேர்ந்த வெங்கடேசன், 27, மணிகண்டன், 34, ஆகிய இருவரும் சமையல் மாஸ்டர், சப்ளையர் வேலை செய்து வருகின்றனர். கடந்த 24ல் இரவு 10:15 மணிக்கு கிருஷ்ணராயபுரம், கிழக்கு காலனியை சேர்ந்த இளையராஜா, 30, கவின், 25, முத்துக்குமார் ஆகிய மூவரும் ஹோட்டலில் சாப்பிட்டனர். அப்போது, ஆம்லெட்டில் மண்ணெண்ணெய் வாடை வருவதாக கூறி கேள்வி எழுப்பினர். இதில், ஏற்பட்ட தகராறில் மணிகண்டனை, இளையராஜா தரப்பினர் கட்டையால் தாக்கினர். இதில் காயமடைந்த அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்படி, இளையராஜா உள்ளிட்ட மூவர் மீதும் மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதேபோல், தன்னை ஜாதி பெயரை கூறி, கட்டையால் தாக்கியதாக இளையராஜா அளித்த புகாரின்பேரில் வெங்கடேசன், மணிகண்டன், நரசிம்மன் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.