விவசாயிகள் பாதிப்புகிருஷ்ணராயபுரம்,-பனிப்பொழிவு தாக்கத்தால், வெற்றிலை மஞ்சள் நிறத்துக்கு மாறி வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரத்தை அடுத்த லாலாப்பேட்டை, பிள்ளபாளையம், வல்லம், மகிளிப்பட்டி, திருக்காம்புலியூர், வீரவள்ளி ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக வெற்றிலை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதிகளில் விளையும் வெற்றிலைகளை பறித்து கரூர், திருச்சி, வெளியூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பனிப்பொழிவு காரணமாக வெற்றிலை கொடிகள் பசுமை நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறி வருகிறது.இதனால் இப்பகுதிகளில் வெற்றிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிறம் மாறிய வெற்றிலைகளை வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்டுவதால், வெற்றிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தை மாதம் வெற்றிலை தேவை அதிகமாக இருந்தும், பனி காரணமாக வெற்றிலை உற்பத்தி, விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 100 கவுளி கொண்ட வெற்றிலை மூட்டை 6,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பாம்பு கடித்து பள்ளி மாணவன் பலிகரூர்,- கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, பாம்பு கடித்து, பள்ளி மாணவன் உயிரிழந்தான்.அரவக்குறிச்சி அருகே, பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த, முகமது சுல்தான் என்பவரது மகன் முகமது ஹக்கீஸ் ஆதில், 16; பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த, 26ல் பொன்னா கவுண்டனுாரில் உள்ள, அரசுப் பள்ளியில், முகமது ஹக்கீஸ் ஆதில், விளையாடி கொண்டிருந்தபோது, அவனை பாம்பு கடித்தது. இதையடுத்து, ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வந்த சிறுவன், நேற்று முன்தினம் உயிரிழந்தான். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
மின் ஊழியர் மத்திய அமைப்பு பேரவை கூட்டம்கரூர்,-கரூர் மாவட்ட மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.,) சார்பில், மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமையில், பேரவை கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது. அதில், மின் வாரிய கேங்க் மேன், பகுதி நேர பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 31ல் கண்டன ஆர்ப்பாட்டமும், பிப்ரவரி 16ல் மண்டல அளவில், சாலை மறியல் போராட்டமும், 80 அடி சாலையில் உள்ள மாவட்ட மின் வாரிய அலுவலகம் முன், நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர் தனபால், மாவட்ட சி.ஐ.டி.யு., பொருளாளர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய பாசன வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறப்புகரூர்,- அமராவதி அணையில் இருந்து, புதிய பாசன வாய்க்காலில், மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து ஆற்றில் நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று காலை வினாடிக்கு, 440 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 77.23 அடியாக இருந்தது. அமராவதி அணைக்கு, நேற்று காலை வினாடிக்கு, 228 கன அடி தண்ணீர் வந்தது.