கோவை-நிலங்களைக் கையகப்படுத்துவதில் ஏற்படும் அசாத்திய தாமதத்தால், கோவையில் அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் கேள்விக்குறியாகி வருகின்றன.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய நகரமாக வளர்ந்து வரும் கோவை மாநகரில், பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கோவை சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்குத் திட்டமிடப்பட்டு, 600 ஏக்கருக்கும் அதிகமான பரப்புள்ள நிலம், கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
ஆனால் கோவை நகருக்காகப் போடப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும், நில ஆர்ஜிதத்தில் ஏற்படும் தடைகள், தாமதத்தால் இழுபறியாகி வருகின்றன.
விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தைக் கையகப்படுத்த 2010ல் அரசாணை வெளியிட்டும், இன்னும் முழுமையாக நிலம் கையகப் படுத்தப்படவில்லை. எப்போது முடிந்து, விரிவாக்கப்பணி எப்போது துவங்குமென்று தெரியவில்லை.
மேற்கு புறவழிச்சாலைத் திட்டமும், 12 ஆண்டுகளுக்கு முன்பு, தி.மு.க., அரசால் அறிவிக்கப்பட்டதாகும்.
இத்திட்டத்தை, மூன்று பகுதிகளாகப் பிரித்துச் செய்வதற்கு நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டும், முதல் பகுதிக்கான நிலம் கையகப்படுத்தும் பணியே இன்னும் முடிவடையாததால், இதுவரை ஒரு அடி துாரத்துக்குக் கூட ரோடு அமைக்கப்படவில்லை.இதேபோல, நிலம் இல்லாத காரணத்தால் நகருக்குள் பல பாலங்கள் வடிவம் மாற்றப்படுகின்றன; அல்லது பாதியில் நிற்கின்றன. பத்தாண்டுக்கும் மேலாக அரைகுறையாக அந்தரத்தில் நிற்கும் சிங்காநல்லுார் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி ரயில்வே மேம்பாலம், இதில் முக்கியமானதாகும். கடந்த வாரத்தில்தான் இது முடிவுக்கு வந்து, கட்டடங்கள் இடிக்கும் பணி துவங்கியுள்ளது.
தண்ணீர்பந்தல் ரோடு, நீலிக்கோணாம்பாளையம் ரயில்வே மேம்பாலங்கள் கட்ட அரசாணை வெளியிட்டு, 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் நிலம் கையகப்படுத்தாமல் பணியே துவங்க முடியவில்லை.
காந்திபுரம் மேம்பாலத்தில் கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு சந்திப்புகளில், ரோட்டரி அமைக்காமல், யாருக்கும் பயன் இல்லாத வகையில் பாலம் கட்டப்பட்டதும், சில தனியார் கட்டடங்களைக் காப்பாற்றுவதற்காகத்தான்.
அவிநாசி ரோடு புதிய பாலத்திலும் முக்கிய சந்திப்புகளில் நிலத்தைக் கையகப்படுத்தினால், ரோட்டரி அமைக்க வாய்ப்பிருந்தும் தனியார் கட்டடங்களைக் காப்பாற்றும் வகையிலேயே பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைப் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்துவதற்கு, தனியாக ஒரு பிரிவை தமிழக அரசு உருவாக்கி, டி.ஆர்.ஓ., தாசில்தார்கள் என பலரை நியமித்த பின்னும், கோவையில் நிலம் கையகப்படுத்தும் பணியில் பெரிய மாற்றத்தைக் காண முடியவில்லை.
இதன் காரணமாகவே, ஏராளமான வளர்ச்சிப் பணிகள் தடை பட்டுள்ளன அல்லது தாமதமாகி வருகின்றன.
இந்தத் திட்டங்களுக்கே நிலம் கையகப்படுத்த முடியாத நிலையில், மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை, கோவையில் நிறைவேற்றுவது வெறும் கனவாக மட்டுமே முடியும்.
கோவையில் வளர்ச்சிப் பணிகளுக்கான நிலங்களை கையகப்படுத்துவதற்கு, தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி, கூடுதல் நிதியையும், அலுவலர்களையும் ஒதுக்கி, பணிகளைத் துரிதப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மட்டுமின்றி, மேட்டுப்பாளையம் பை பாஸ், சத்தி ரோடு விரிவாக்கம் போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கும் நிலம் கையகப்படுத்துவதே சவாலாகவுள்ளது.
கோவை ரயில்வே ஸ்டேஷனைச் சுற்றிலும் உள்ள சில கட்டடங்களை அகற்றி, நிலத்தைக் கையகப்படுத்த முடியாத காரணத்தால்தான், தெற்கு ரயில்வேயில் இரண்டாவது அதிக வருவாய் தரும் ஸ்டேஷனாக இருந்தும் விரிவாக்கம் செய்யப்படாமல், தாலுகா தலைநகர ரயில்வே ஸ்டேஷன் போலக் காட்சியளிக்கிறது.