கோவை,-ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள் மற்றும் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க நேற்று கோனியம்மன் கோவிலில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
ஹிந்துசமய அறநிலையத்துறை தமிழகத்திலுள்ள கோவில்களை நிர்வகிக்க அந்த அந்த மாவட்டத்திற்கென்று அறங்காவலர்குழுவை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி மாவட்ட வாரியாக அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்தது.
நேற்று கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக தேவாங்க உயர் நிலைபள்ளி சாலையில் வசிக்கும் ராஜா என்கிற ராஜாமணியும், அறங்காவலர் குழு உறுப்பினர்களாக காரமடை ஆசிரியர் காலனியை சேர்ந்த கவிதா, ராமநாதபுரம் வீரப்பதேவர் நகரை சேர்ந்த கர்ணபூபதி, உப்பிலிபாளையம் காந்திநகரை சேர்ந்த தனபால், சூலுார் அருகம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் நேற்று கோனியம்மன் கோவிலில் பதவியேற்றுக் கொண்டனர். ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கருணாநிதி முன்னிலையில் பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., செயலாளர் கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் தலைமை வகித்தனர்.
கோவையில் சில பிரச்னைகளால் திருப்பணி நடைபெறாமல் பாதியில் நின்று போன கோவில்களின் திருப்பணிகள் நடைபெற உறுதுணையாக அறங்காவலர்கள் இருக்க வேண்டும் என்று வேண்கோள் விடுத்தனர்.
முன்னதாக கோவில் முன்பிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலுக்கு அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.கோனியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது அதன் பின் கோவில் பிரகாரம் வலம் வந்தனர். கோனியம்மன் கோவில் மண்டபத்தில் பதவியேற்புவிழா நடந்தது. திரளான தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.