கடலுார் : 'கடலுார் மஞ்சை நகர் மைதானத்தில் ரூ.1 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைத்து, மேம்படுத்தப்பட உள்ளது' என, கடலுார் மாநகராட்சி கமிஷனர் நாவேந்திரன் கூறினார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
கடலுார் மாநகராட்சியின் மைய பகுதியில் மைதானம் அமைந்திருப்பது கடலுார் மக்களுக்கு வரப்பிரசாதமாகும். இங்கு, குடிப்பிரியர்கள் சிலர் மாலை வேளையில் மது அருந்திவிட்டு பாட்டிலை அங்கேயே உடைத்துவிட்டு செல்லும் அவல நிலை உள்ளது. அத்துடன், மது அருந்துவதற்காக வாங்கி வரும் தின்பண்டங்களினால் ஏராளமான குப்பைகள் சேருகின்றன. இதனால், மாலை நேரத்தில் காற்று வாங்க வருபவர்கள் முகம் சுளிக்கின்றனர்.
இதை தவிர்க்க, மைதானம் முழுவதும் ரூ.1 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைக்கப்படவுள்ளது. மைதானத்திற்குள் செல்ல நான்குபுறமும் கேட் அமைக்கப்படும். மைதானத்திற்குள் 10 மீட்டருக்கு 6 மீட்டர் அளவுள்ள புதிய மேடை கட்டப்படும்.
மேலும், கடலுார் மாநகராட்சியை 4 மண்டலங்களாக பிரித்து அலுவலகம் கட்டப்படவுள்ளது. புதுப்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், கடலுார் முதுநகர் உட்பட 4 இடங்களில் மண்டல அலுவலகங்கள் கட்டப்படும். இந்த அலுவலகங்களில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும்.
பழைய கலெக்டர் அலுவலக சாலையில் அதாவது காங்., அலுவலக வேலி ஓரமாகவும், சப் ஜெயில் ரோடு, மாவட்ட கோர்ட் சாலை முன்பு, பீச் ரோடு, முதுநகர் மோகன் சிங் தெரு, காந்தி பார்க் அருகே என 89 கடைகள் விரைவில் கட்டப்பட உள்ளது. விரைவில் இப்பணிகள் துவக்கப்படவுள்ளது.
இவ்வாறு, கமிஷனர் கூறினார்.