மதுரை: துபாயில் இருந்து மதுரைக்கு 100 பவுன் நகைகளுடன் வந்தவர், உரியவரிடம் ஒப்படைக்காமல் தப்பினார். நகைக்காக நடுரோட்டில் தகராறில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி தென்னுாரைச் சேர்ந்தவர் முகமது உவைஸ் 30. இவரது சகோதரர் துபாயில் பணிபுரிகிறார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சகோதரரின் நண்பர். இவரிடம் 100 பவுன் நகைகளை கொடுத்து, அதை முகமது உவைஸிடம் கொடுக்குமாறு கூறினார். இதுகுறித்து தம்பிக்கும் தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் விமானத்தில் துபாயில் இருந்து மதுரை வந்த தினேைஷ அவருக்கு அறிமுகமான கேரளா கோழிகோடு அகில் 27, சுதீஷ் 35, சிபின் 30, ரெஜிஸ் 38, ஆகியோர் வரவேற்று காரில் அழைத்துச்சென்றனர்.
இதை அறிந்த முகமது உவைஸ், உறவினர் முஸ்தாக் ஆகியோர் காரில் பின்தொடர்ந்து மண்டேலா நகர் ரிங் ரோட்டில் தடுத்தனர். இருதரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை பயன்படுத்தி அவ்வழியே வந்த பஸ்சில் ஏறி தினேஷ் தலைமறைவானார்.
ரோட்டில் அடிதடியில் இறங்கிய இருதரப்பையும் சேர்ந்த 6 பேரை அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் கைது செய்தார். போலீசார் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் தங்கத்தை கடத்தி வருவோரை 'குருவி' என்பார்கள். தினேஷ் 100 பவுன் நகைகளுடன் வந்ததாக முகமது உவைஸ் எங்களிடம் தெரிவித்தார். ஆனால் சுங்கத்துறை சோதனையை மீறி அவ்வளவு நகைகளை விமான நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு வர வாய்ப்பில்லை
.தினேஷ் தனது கோழிக்கோடு கூட்டாளிகளுடன் விமான நிலையத்தில் இருந்து 'எஸ்கேப்' ஆக முயன்றபோது முகமது உவைஸ் தரப்பினர் சுற்றி வளைத்தனர். தினேைஷ பிடித்தால்தான் உண்மையிலேயே நகைகளை கொண்டு வந்தாரா அல்லது துபாயில் பதுக்கி வைத்துவிட்டு, கொண்டு வந்தது போல் நாடகமாடினாரா என தெரியவரும். இவ்வாறு கூறினர்.