ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் குறித்து, வங்கியாளர் மேற்கொள்ள வேண்டிய பணிகள், விதிமுறை குறித்த கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசியதாவது: தேர்தல் நோக்கத்துக்காக வங்கி கணக்குகளை துவங்குவதற்கு, வங்கிகள் சேவை வழங்க வேண்டும். வங்கிகளால் அவுட்சோர்சிங் செய்யப்பட்ட ஏஜென்சிகள், ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்புவதற்காக செல்லும்போது, வங்கிகளால் வழங்கப்பட்ட கடிதம், ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும்.
தேர்தல் நடைமுறை விதி அமலில் உள்ளதால், வழக்கத்துக்கு மாறான சந்தேகத்துக்கு இடமான பண பரிவர்த்தனை வங்கி மூலம் நடந்தாலோ, பல நபர்களின் வங்கி கணக்குகளுக்கு ஆர்.டி.ஜி.எஸ்., மூலம் பணி பரிவர்த்தனை நடந்தாலும், வேட்பாளர்கள் அல்லது அவரது மனைவி, அவர் சார்ந்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து, ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரொக்க டெபாசிட் அல்லது ரொக்கத்தை திரும்ப பெறுதல் இருந்தால், தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சந்தேகத்துக்கு இடமான பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறதா என, வங்கிகள் கண்காணிக்க வேண்டும். 10 லட்சம் ரூபாய்க்கு மேலான பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்போது, வருமான வரித்துறை, தேர்தல் மேற்பார்வை அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.