ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு: 10 பேர் கைது
அரூர்: அரூர் அடுத்த, வேடகட்டமடுவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது நிலத்துக்கு செல்லும் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, நேற்று அரூர் தாசில்தார் கனிமொழி மற்றும் வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்ற வேடகட்டமடுவில் உள்ள சம்பத் என்பவரின் வீட்டின் அருகில் சென்றனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த சங்கர், 50, ஹரிகரன், 25, முருகம்மாள், 45, சாந்தி, 55, மஞ்சுளா, 26, கற்பகம், 50, செவ்வந்தி, 30, சவுமியா, 31, கம்சலா, 50, ரஞ்சிதா, 35, ஆகியோர் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதிகாரிகளை தகாத வார்த்தையால் திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசில் தாசில்தார் கனிமொழி அளித்த புகார்படி, 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து, முருகம்மாள், சாந்தி உள்ளிட்ட, 8 பெண்கள் உட்பட, 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
போதை ஊசி போட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, கல்லாவியை சேர்ந்தவர்கள் அசீம், 20, உபேத், 20, சுபாஷ், 25, ஆகிய மூவரும், நேற்று மதியம் உபேத்க்கு சொந்தமான, 'டாடா ஏஸ்' சரக்கு வாகனத்தில் பீரோவை ஏற்றிக்கொண்டு காவேரிப்பட்டணம் சென்றனர்.
அங்குள்ள உறவினர் வீட்டில் பீரோவை இறக்கி விட்டு திரும்பி வரும்போது, நெடுங்கல் தென்பெண்ணை பாலத்தின் அருகில் போதைக்காக, 10 வழி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம், மூவரும் ஒருவருக்கொருவர் போட்டுக்கொண்டுள்ளனர்.
பின் அங்கிருந்து கரடியூர் அருகே வந்தபோது அசீம், உபேத் இருவரும் மயங்கி தண்ணீர் கேட்டுள்ளனர். அப்பகுதியில் பேக்கரி கடை வைத்திருக்கும் ஞானசேகர் என்பவர் தண்ணீர் கொடுத்தார். அதற்குள் அசீம், உபேத், சுபாஷ் மூவரும் மயங்கி விழுந்தனர்.
அப்பகுதியில் இருந்தவர்கள் மூவரையும் மீட்டு, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
வரட்டாறு தடுப்பணையில் தண்ணீர் திறக்க ஆலோசனை
அரூர்: அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. இதற்கு, கிழக்கு தொடர்ச்சி மலையிலுள்ள சித்தேரி மலையிலிருந்து நீர்வரத்து உள்ளது. இதிலிருந்து, திறந்து விடப்படும் நீரால், 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், 25 ஏரிகள் நிரம்பும்.
சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால், கடந்த மாதம் தடுப்பணையின் முழு கொள்ளளவான, 34.45 அடியை எட்டியது. தடுப்பணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, நேற்று, உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம் தலைமையில், உதவி பொறியாளர் பிரபு, இடது மற்றும் வலதுபுற பாசன கால்வாய் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கால்வாய்களை துார்வாரி ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப வேண்டும் என, பாசன கால்வாய் சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, வரட்டாறு தடுப்பணையில் இருந்து, 40 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசுக்கு கோரிக்கை வைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.