ஓசூர்: ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், நேற்று சிறப்பு முகாம் துவங்கியது.
ஓசூர் தாலுகாவில், நிலத்தின் வழிகாட்டு மதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த காலங்களில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பை விட குறைவாக பத்திரப்பதிவு செய்த, 350க்கும் மேற்பட்ட ஆவணங்கள் நிலுவையில் உள்ளன.
இதனால், அவர்களால் வங்கி கடன் மற்றும் வேறொரு நபருக்கு நிலத்தை விற்பனை செய்ய முடியவில்லை. இதை நிவர்த்தி செய்யும் வகையில், நிலத்திற்கு சரியான வழிகாட்டு மதிப்பை நிர்ணயித்து, சம்பந்தப்பட்டவர்கள் குறைவான முத்திரை கட்டணம் செலுத்தி, நிலுவையில் உள்ள ஆவணங்களை திரும்ப பெறும் வகையில், ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், நேற்று சிறப்பு முகாம் துவங்கியது.
தனித்துணை கலெக்டர் (முத்திரை) துரைசாமி தலைமையில், மாவட்ட பதிவாளர் சிவலிங்கம், தனி தாசில்தார் மோகன் ஆகியோர், சரியான வழிகாட்டு மதிப்பை நிர்ணயித்து, குறைவான முத்திரை கட்டணத்தை நிர்ணயம் செய்து, அதை செலுத்திய பொதுமக்களுக்கு ஆவணங்களை திரும்ப வழங்கினர். இன்றும் காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. ஏற்பாடுகளை, ஓசூர் சார்பதிவாளர் ரகோத்தமன் செய்துள்ளார்.