வண்ணாரப்பேட்டை,-சென்னை, வண்ணாரப்பேட்டை, எம்.சி.ரோட்டில் நுாற்றுக்கணக்கான துணிக்கடைகள் உள்ளன. 'குட்டி தி.நகர்' என அழைக்கப்படும் வண்ணாரப்பேட்டையில், விசேஷ தினங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் துணி வியாபாரிகள் இங்கு வந்து மொத்தமாகவும், சில்லரையாகவும் துணிகள் வாங்கி செல்வர்.
இங்கு, வண்ணாரப்பேட்டை, என்.என்.கார்டன் 3வது தெருவில் துணிக்கடை வைத்திருக்கும் இருவர், 'யூடியூப்' மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக, குறைந்த விலைக்கு துணிகள் விற்பதாகக் கூறி, மாறி மாறி சலுகைகளை அறிவித்துக் கொண்டே வந்தனர்.
இதில், இரு தரப்பினருக்கும் இடையே போட்டி ஏற்பட்டு, கசப்பு மனப்பான்மை உருவானது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு இரு கடைக்காரர்களின் ஊழியர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதனால் வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து விசாரித்த போலீசார், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ், 28, யுவசக்தி, 25, அஜித், 23, நாகராஜ், 29, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.