திருத்தணி,-திருத்தணி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கும், தற்போது உள்ள குறுகிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்துவதற்கு இடவசதியில்லாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அருகே, நான்கரை ஏக்கர் பரப்பில், 12.74 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் கடந்தாண்டு ஆக.9ம் தேதி துவக்கின.
தற்போது பணிகள் துவக்கி பேருந்து நிலையத்திற்கு கம்பிகள் கட்டி பில்லர் போடும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று, திருத்தணி நகராட்சி தலைவர் சரஸ்வதி, துணைத் தலைவர் சாமிராஜ், ஆணையர் ராமஜெயம் ஆகியோர் புதிய பேருந்து நிலைய பணிகளை நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
பின், ஆணையர் ராமஜெயம் கூறியதாவது:
புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டு, 2024ம் ஆண்டு, ஜூன் மாதத்திற்குள் பணிகள் முடித்து ஒப்படைக்குமாறு ஒப்பந்தாரருக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
ஆனால், ஒப்பந்ததாரர் பணிகள் துரித வேகத்தில் பணி நடப்பதால் வரும் டிசம்பர் மாதத்திற்குள் பேருந்து நிலைய பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு விடுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
இந்த பேருந்து நிலையம் திறந்தால் திருத்தணியில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைவர்.
இவ்வாறு அவர் கூறினார்.