மீஞ்சூர்,-மீஞ்சூர் அடுத்த, காட்டுப்பள்ளி பகுதியில் இரண்டு துறைமுகங்களும், அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் ஆயில் மற்றும் எரிவாயு முனையங்களும் உளளன.
இந்நிறுவனங்களுக்கு தினமும், நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இவை மீஞ்சூர் -- வல்லுார் - துறைமுகச் சாலை வழியாக பயணிக்கின்றன.
தற்போது, வல்லுார் -- காட்டுப்பள்ளி இடையே, எண்ணுார் துறைமுகம் சார்பில், சாலை விரிவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளால் வல்லுார்- துறைமுகம் இடையே வாகனங்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன.
இதனால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், நேற்று, வழக்கத்திற்கு மாறாக போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருந்தன. மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இருந்து, வல்லுார், அத்திப்பட்டு புதுநகர், கொண்டக்கரை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்தபடி பயணித்தன.
நேற்று, பகல் முழுதும் வாகன நெரிசல் ஏற்பட்டதால், அவ்வழியாக பயணித்த பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இது குறித்து போக்குவரத்து போலீசார் தெரிவித்ததாவது:
சாலை விரிவாக்கம், சிறுபாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் நெரிசல் ஏற்படுகிறது.
நேற்று, துறைமுகங்களில் பெரிய கப்பல்கள் வந்ததால், அதிக 'கன்டெய்னர்'கள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. வழக்கத்தினை விட கூடுதலான லாரிகள் பயணித்தன. வாகனங்கள் மெதுவாக பயணித்தன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.