விருதுநகர்,-விருதுநகரில் விவசாயம் காக்கவும், இளைஞர்கள் விவசாயத்தை கற்றுக் கொள்ளவும், நாட்டுமாடு இனத்தை காக்கவும் வலியுறுத்தி சேலம் சங்ககிரி பட்டதாரி சந்திரசூரியன் 35, குமரி முதல் இமயம் வரை விழிப்புணர்வு மாட்டு வண்டி பயணம் துவக்கினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: விவசாயம் மீது ஏற்பட்ட பற்றினால் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி இப்பயணத்தில் ஈடுபட்டுள்ளேன். விவசாயத்தில் விளைச்சல் இருந்தும் போதிய விலை இல்லாமல் போனதால் மனமுடைந்தேன்.
இதனால் செகப்பி என்ற எனது காங்கயம் ரக மாட்டுடன் வண்டிகட்டி ஜன. 1 முதல் குமரியில் இருந்து இமய மலை வரை விவசாயம் பற்றி விழிப்புணர்வு பயணம் துவங்கி நேற்று விருதுநகர் வந்தேன்.
மாட்டுக்கு கால்நடை மருத்துவரின் உடற்தகுதி சான்று பெற்று அவர்களின் வழிகாட்டுதல்படி நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 கிலோ மீட்டர் வரை பயணம் மேற்கொண்டு 3 ஆயிரத்து 600 கி.மீ., கடக்க உள்ளேன். இதன் மூலம் விவசாயம் தான் உலகுக்கு உயிர் என்பதை உணர்த்தவே இந்த பயணம், என்றார்.