சிவகாசி,- -சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி பல ஆண்டுகளாக பேச்சளவிலேயே இருப்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
குட்டி ஜப்பான் சிவகாசியில் பட்டாசு. தீப்பெட்டி, அச்சுத்தொழில் பிரதானமாக உள்ளது. இதனால் நகர் முழுவதும் எந்நேரமும் பரபரப்பாக போக்குவரத்து நிறைந்திருக்கும். சிவகாசி சாட்சியாபுரம், செங்கமலநாச்சியார் புரம் ரோட்டில் ரயில்வே கேட் உள்ளது. இதில் சாட்சியாபுரம் அதிகம் போக்குவரத்துக் கொண்ட பிரதான வெளியாக உள்ளது. இந்த வழித்தடத்தில் பொதிகை, சிலம்பு, கொல்லம் எக்ஸ்பிரஸ், பயணிகள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. தினமும் பத்துக்கும் மேற்பட்ட முறை ரயில்கள் வந்து செல்கின்றன.
இந்த ரயில்வே கேட் வழியாக தினமும் தொழிற்சாலைக்குச் தொழிலாளர்கள், பல்வேறு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் நகருக்கு வந்து செல்கின்றனர். மேலும் பல்வேறு தேவைகளுக்கு சுற்றுப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் ரயில்வே கேட்டை கடந்து வருகின்றனர்.
40 நிமிடம் காத்திருப்பு
காலை 8:15 லிருந்து 9:30 மணிக்குள் இரு ரயில்கள் இந்த வழித்தடத்தில் செல்கிறது. அந்த நேரத்தில் 40 நிமிடம் கேட் அடைக்கப்படுகிறது. இதனால் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். பள்ளி மாணவர்கள் சைக்கிளில் வரும்பொழுது போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். பலர் கீழே விழுந்து காயப்படுகின்றனர். மதிய வேளையில் இரு முறை ரயில் இந்த வழித்தடத்தில் செல்கிறது. அந்த நேரத்தில் கொளுத்தும் வெயிலில் வாகன ஓட்டிகள் காத்திருந்து அவதிப்படுகின்றனர்.
காத்திருக்கும் ஆம்புலன்ஸ்
சில சமயங்களில் ரயில் செல்லும் பொழுது மழை பெய்தால் பெரிதும் அவதிப்பட வேண்டியுள்ளது. மாலை 5:00 மணிக்கும் ரயில்வே கேட் அடைக்கப்படும் பொழுது வேலை முடிந்து, பள்ளி, கல்லுாரி முடிந்து வீட்டிற்குச் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். மேலும் அவசர சிகிச்சைக்காக வருகின்ற ஆம்புலன்ஸ் இதனை கடந்து செல்ல வழி இல்லை. இந்த தாமதத்தால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இரவிலும் இதே நிலைதான்.
வழக்கு
இதனால் சாட்சியாபுரம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பின்னர் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு பாலம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியது. அதே சமயத்தில் தனியார் சிலர் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர்.
தேர்தல் வாக்குறுதி
தொடர்ந்து சட்டசபை தேர்தல் வரவும், அனைத்து கட்சியினரும் சிவகாசியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்டனர். தி.மு.க.,வும் இதனை பிரதான வாக்குறுதியாக அளித்தது. தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் மீண்டும் பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையே நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி செய்து ரயில்வே மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தலாம் என தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து அளவீடு பணிகள் நடந்தது. சாட்சியாபுரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. 700 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்கப்பட உள்ளது.
கருத்துக்கேட்பு கூட்டம்
ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ஜானகி தலைமையில் மீண்டும் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. சிவகாசி பகுதி பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மக்களின் நேர விரயத்தை தவிர்க்கவும், விபத்தினை தடுக்கவும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியினை உடனடியாகத் துவங்க வேண்டும்.