ராமநாதபுரம்,-ராமநாதபுரம் அருகே அரசு பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்விழுந்து படுகாயம் அடைந்ததால் கிராம மக்கள் டிரைவர் பாலமுருகனை தாக்கியதில் படுகாயம் அடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து பெரியபட்டினம் வரை 4ம் நம்பர்டவுன் பஸ் இயக்கப்படுகிறது. காலை, மாலை முத்துபேட்டை பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.
நேற்று முன்தினம் மாலை டிரைவர் பாலமுருகன் பெரியபட்டணத்தில் இருந்து ராமநாதபுரம் அரண்மனைக்கு பஸ்சை ஒட்டி வந்தார். முன்புறம், பின்புறம் படிக்கட்டுகளில் மாணவர்கள் சிலர் தொங்கியவாறு பயணித்தனர்.
வாலாந்தரவை வளைவில் திரும்பிய போது பின்புற படிக்கட்டில் நின்ற மதன் 18, என்ற கல்லூரி மாணவர் சாலையோர கம்பத்தில் இடித்து கீழே விழுந்தார். பின்னால் டூவீலரில் வந்த அவரது நண்பர்கள் காயமடைந்தவரை ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த வாலாந்தரவை கிராமத்தினர் சிலர் டிரைவர் பாலமுருகனை கடுமையாக தாக்கினர். படுகாயம் அடைந்தவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கண்டக்டர் வேல்முருகன் புகாரில்கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
டிரைவர் பாலமுருகன் கூறுகையில், மாணவர்களிடம் எத்தனை முறை கூறினாலும் கேட்காமல் படிக்கட்டில் தான் தொங்கி வருகின்றனர். உள்ளே வரச்சொன்னாலும் கேட்பதில்லை. பொதுமக்களின் பயணமும் தடைபடக் கூடாது. ஒவ்வொரு நாளும் பிரச்னையுடன் தான் பணி செய்ய வேண்டியுள்ளது, என்றார்.