ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டாலும் இன்னமும் முழுமையானஅடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் உள்ளது. சிறப்பு மருத்துவ நிபுணர்கள் காலி பணியிடங்களை நிரப்பவில்லை. பொது மருத்துவ சிகிச்சை பிரிவில் டாக்டர்களே அனைத்து வகை சிகிச்சைகளும் அளிக்கின்றனர்.
எலும்பு மூட்டு சிகிச்சை பிரிவு, காது, மூக்கு தொண்டை சிகிச்சை, பல், கண் மருத்துவ பிரிவுகள், பிரசவம் மற்றும் மகளிர் சிகிச்சை, குழந்தைகள் நலம், தோல் நோய், சுவாச பிரச்னைகளுக்கான சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகளில் தற்போது டாக்டர்கள்உள்ளனர்.
பொது மருத்துவர்களே நரம்பியல் தொடர்பானமருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர். ஆனால் மிக நுணுக்கமான நரம்பியல் சிகிச்சைகளுக்கு அதற்குரிய சிறப்பு நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் இல்லை.
தற்போதைக்கு ஒரே ஒரு நரம்பியல் சிறப்பு டாக்டர் மட்டுமே பணியில் இருக்கிறார். அவர் விடுப்பு எடுக்கும் நேரங்களில் அவருக்கு மாற்று டாக்டர்கள் இல்லை.
தற்போது நரம்பியல் பிரிவில் செவ்வாய், வியாழன், வெள்ளி கிழமைகளில் மட்டுமே நரம்பியல் சிகிச்சை தொடர்பான புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே நரம்பியல் ஓ.பி., செயல்படும் நிலையில் இருக்கும் ஒரு நரம்பியல் டாக்டரும் விடுப்பில் சென்று விடும்போது சிகிச்சை பெற முடியாமல் திரும்பி செல்கின்றனர்.
மாவட்டத்தின் பல்வேறு குக்கிராமங்களில் இருந்து மாவட்ட தலைநகரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தரமான உயர் சிகிச்சை பெறலாம் என்ற நம்பிக்கையுடன் வரும் பொதுமக்கள் துறை சார்ந்த டாக்டர் இல்லாததால் திருப்பி அனுப்பப்படுகின்றனர். அல்லது பொது மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டியுள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட சிறப்பு டாக்டர்களை நியமிக்க வேண்டும், என மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு அறிக்கை அளித்துள்ளனர்.
எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.