புதுக்கோட்டை:காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு, கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி, மார்ச், 20ம் தேதி, சட்டசபை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டையில், காவிரி - வைகை - குண்டாறு நீர் பாசன விவசாயிகள் சங்க கூட்டம், நேற்று நடைபெற்றது.
திருச்சி, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் மாநில பொதுச்செயலர் அர்ஜுனன் கூறியதாவது: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் காவிரி, வைகை, குண்டாறு திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று அறிவித்து, முதல் கட்ட பணிகளுக்காக, 760 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், தி.மு.க., அரசு, 250 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கி உள்ளது. அதனால், திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆறுகள் இணைப்பு திட்டத்திற்கு, தமிழக அரசு, உடனடியாக கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என, வலியுறுத்தி, மார்ச் 20ம் தேதி, சென்னையில், சட்டசபை முன், ஏழு மாவட்ட விவசாயிகள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.