திருநெல்வேலி:வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு, 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், மதுக்கரையைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். திருநெல்வேலி மாவட்டம் தெற்கு வீரவநல்லுாரில் பழைய வீடு ஒன்றை விலைக்கு வாங்கினார். அந்த வீட்டின் வரி விதிப்பை தன் பெயருக்கு மாற்ற, ஊராட்சி செயலர் சொக்கலிங்கத்திடம் விண்ணப்பித்தார்.
அதற்கு அரசு கட்டணம், 2,800 ரூபாயை செலுத்தினார். சொக்கலிங்கம், 3,000 ரூபாய் லஞ்சமாக கேட்டார். இதனால், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சண்முகசுந்தரம் புகார் செய்தார்.
டி.எஸ்.பி., எஸ்கால், இன்ஸ்பெக்டர் ஞான ராபின்சன் மற்றும் போலீசார் நேற்று ரசாயனம் தடவி கொடுத்த பணத்தை, சொக்கலிங்கத்திடம் சண்முகசுந்தரம் கொடுத்தார்.
அதை பெற்ற சொக்கலிங்கத்தை, அங்கு மறைந்திருந்த போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அழகப்பபுரத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.