கூடலுார்:கூடலுார் அருகே காட்டு யானை தாக்கி, தனியார் எஸ்டேட் காவலர் பலியானார்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் ஓவேலி சீபுரம் பகுதியை சேர்ந்தவர் நவுசாத் அலி, 38. இவர், அம்பிலிமலை பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில், இரவு காவலராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று மாலை, ஜமால் என்பவருடன், அங்குள்ள காபி தோட்ட பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.
காட்டு யானை வந்ததால், இருவரும் தப்பிக்க ஓடினர். எதிர்பாராதவிதமாக யானை தாக்கியதில், நவுசாத் அலி பலியானார். தப்பிக்க ஓடிய ஜமால் விழுந்து காயமடைந்து, அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார்.
மக்கள் வந்து யானையை விரட்டினர். ஜமாலை மீட்டு, கூடலூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். இச்சம்பவத்தால், ஆவேசமடைந்த மக்கள், நவுசாத் அலியின் உடலை, சீபுரம் பகுதிக்கு எடுத்து வந்து, காட்டு யானையை பிடிக்கவும், இறந்தவர் குடும்பத்துக்கு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், வனத்துறையினர், போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.