திருப்பூர்:வடமாநில தொழிலாளர்கள், தமிழக தொழிலாளர்களை விரட்டி தாக்கியதாக, சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவை, யார் அனுப்பியது என, 'சைபர் கிரைம்' போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர், அனுப்பர்பாளையம், திலகர் நகரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில், நுாற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத்தினர் தங்கி பணிபுரிகின்றனர். சிலநாட்களுக்கு முன், 'தமிழர்களை வடமாநிலத்தினர் அடித்து விரட்டுகின்றனர்' என்பது போன்ற வகையில் வீடியோ வைரலானது.
கடந்த, 14ம் தேதி, வட மாநில தொழிலாளி ஒருவர் டீ குடிக்க சென்ற போது, இருதரப்புக்கு தற்செயலாக ஏற்பட்ட பிரச்னையில், எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது நடந்தது போல் சித்தரித்து தவறாக பகிரப்பட்டு வருவது என, போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இருதரப்பு மோதல் தொடர்பாக, வேலம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். அதில், ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவர்களை அழைத்து விசாரிக்க உள்ளனர். இதற்கிடையில், வீடியோவை யார் எடுத்தனர், இதை பகிர்ந்து பதட்டத்தை உருவாக்கியவர்கள் குறித்து கண்டறிய, மாநகர 'சைபர் கிரைம்' போலீஸ் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கூறியதாவது:
அனுப்பர்பாளையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. தற்போது, எந்தவித பிரச்னையுமில்லை. வீடியோவை யார் எடுத்தார், அதை பகிர்ந்தவர்கள் யார் என்பது என, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.