கூடலூர்:''ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி கட்டுமான பணிகள், விரைவில் நிறைவு பெறும்,'' என, அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், கூடலுாரில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், ''ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி கட்டுமான பணிகள் விரைவில் நிறைவு பெறும். மருத்துவமனை பயன்பாட்டுக்காக ஒரு பஸ், ஒரு பேட்டரி கார் வழங்கப்படும்,'' என்றார்.
நீலகிரி எம்.பி., ராஜா பேசுகையில், ''கூடலுாருக்கு மாற்றப்பட்ட மாவட்ட மருத்துவமனையை குன்னூருக்கு கொண்டு செல்ல அமைச்சருக்கு ஆசை இருந்தது. ஆனால், கூடலூரின் சூழல் கருதி, இங்கு மாற்றப்பட்டது. இம்மருத்துவமனையை மேம்படுத்த, 28 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. டான்டீயை மேம்படுத்தவும், தொழிலாளர்கள் பாதிக்காத வகையிலும், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே, டான்டீ குறித்து, சிலரின் பொய் பிரசாரத்தால், தொழிலாளர்கள் அச்சப்பட தேவையில்லை,'' என்றார்.
மாவட்ட கலெக்டர் அம்ரீத் தலைமை வகித்தார். முதுமலை துணை இயக்குனர் வித்யா, அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். கூடலுார் தாசில்தார் சித்தராஜ் நன்றி கூறினார்.