தஞ்சாவூர்:''தமிழைப் பயிற்று மொழியாக மாற்றுவதை, அனைவரும் கடமையாக கொண்டு செயல்பட வேண்டும்,'' என, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று, தமிழ் கல்வி இயக்கம் சார்பில் நடந்த மாநாட்டில், அவர் பேசியதாவது:
பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை விட, ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் தான் அதிகமாக உள்ளனர். குழந்தைகள், ஆங்கில வழியில் படித்தால் தான் வேலை கிடைக்கும் என்ற தவறான மயக்க நிலை பெற்றோர்களிடம்உள்ளது.
அதன் விளைவாக படித்த கூலிகள், தொழில்நுட்பக் கூலிகள் என சொல்லும் அளவுக்கு பெருகியுள்ளது. சிந்தனையாளர்கள் உருவாவது தடையாகி விட்டது. அக்காலத்தில், எட்டாம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி கட்டாயமாக இருந்தது.
ஆங்கிலம் கூடுதலாக ஒரு மொழிப் பாடமாகத் தான் இருந்தது. அதை படித்தவர்கள் தான் அறிவியலாளர்கள், சான்றோர்கள் உருவாக்கினர்.
அறிவியல், கணிதம், மருத்துவம், பொறியியல் போன்றவற்றை, ஆங்கில வழியைத் தவிர, தாய்மொழியில் படிக்க முடியாது என்ற தவறான எண்ணம் பரவி வருகிறது.
ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் பொறியியல், மருத்துவத்தைத் தாய்மொழியில் தான் கற்கின்றனர்.
கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் தாய்மொழிக் கல்வியில் உறுதியாக இருப்பது போல், நாமும் தமிழ் வழிக் கல்வியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
தமிழைப் பயிற்று மொழியாக மாற்ற வேண்டியதை கடமையாக கொண்டு செயல்பட வேண்டும். அதில் உறுதியாக இருந்தால் தான் தமிழ்வழிக் கல்வி கனவு நனவாகும்.
இவ்வாறு அவர்பேசினார்.
முன்னதாக, டாக்டர் நரேந்திரன் எழுதிய நுாலை அடிகளார் வெளியிட, அதை டாக்டர் இளங்கோவன் பெற்றுக் கொண்டார்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக அரசு வரும் கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி கல்வி வரைதமிழை பயிற்று மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரசு தேர்வில், தமிழில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற அரசாணையை அமல்படுத்த வேண்டும். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில், தமிழ் வழி மருத்துவக் கல்லுாரியை துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.