குன்னூர்:ரூ.3.60 லட்சம் வாடகை செலுத்தி, பிரிட்டன் சுற்றுலா பயணிகள், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுாருக்கு, மலை ரயிலில் பயணித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில், குன்னுார் - மேட்டுப்பாளையம் இடையே 'எக்ஸ் கிளாஸ்' நீராவி இன்ஜின் வாயிலாகவும், குன்னுார் -- ஊட்டி இடையே 'டீசல் இன்ஜின்' வாயிலாகவும் இயக்கப்படுகிறது. இதில் பயணிக்க, சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், 3.60 லட்சம் ரூபாய் செலுத்தி, மலை ரயிலில், பிரிட்டன் சுற்றுலா பயணிகள் 16 பேர் பயணம் செய்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 10:00 மணிக்கு புறப்பட்டு, குன்னூருக்கு மதியம் 1:00 மணிக்கு வந்து சேர்ந்தனர்.
பாரம்பரிய லோகோ பணிமனையை பார்வையிட்டு புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். பின், நீலகிரியில் உள்ள சுற்றுலா மையங்களை பார்வையிட சென்றனர்.
பிரிட்டன் சுற்றுலா பயணி கிறிஸ்டஹர் கூறுகையில், ''மலை ரயிலில் பயணம் செய்தது, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,'' என்றார்.