கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட மிஸ்ரி நகர் பகுதியில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் மற்றும் கச்சபேஸ்வரர் கோயில்களுக்கு சொந்தமான காலி இடங்களில், சீமை கருவேல மரங்கள் அதிகளவு வளர்ந்துள்ளன. இம்மரத்தின் வேர் நிலத்தடி நீரை முழுமையாக உறிஞ்சி விஷமாக மாற்றும் தன்மை கொண்டது.
மேலும், இம்மரம் வளரும் இடங்களில் நிலத்தடி நீர் முழுமையாக உறிஞ்சப்பட்டு வறண்ட பூமியாக மாறும் சூழல் உள்ளது. இம்மரத்தின் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
எனவே, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றி வாழை, தென்னை மற்றும் பழவகை மரங்களை நட்டு பராமரித்தால் கோவில் நிர்வாகத்திற்கும் வருவாய் கிடைக்கும்.
-ஆர்.வெங்கடேசன், புத்தேரி.
மழை நீர் கால்வாய்க்கு மேல்தளம் அமைக்கப்படுமா?
காஞ்சிபுரம் மாநகராட்சி, 21வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடு ஆனந்த விநாயகர் கோவில் தெருவில், மழை நீர் மற்றும் வீட்டு உபயோக கழிவு நீர் வெளியேறும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், கீழாண்டை கரை தெருவுடன், ஆனந்த விநாயகர் கோவில் தெரு இணையும் சாலை வளைவு பகுதியில், கால்வாய் திறந்த நிலையில் உள்ளது.
இதனால், இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலை வளைவில் திரும்பும்போதும், இவ்வழியாக நடந்து செல்லும் சிறுகுழந்தைகளும் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழ்நிலை உள்ளது.
எனவே, கால்வாய்க்கு கான்கிரீட் மேல்தளம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.உமாசங்கர், காஞ்சிபுரம்.