காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல துறை அதிகாரிகளுக்கு அரசு வாகனங்கள் இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர். வாகனங்கள் இல்லாததால் ஆய்வு பணி செய்வதிலும் தொய்வு ஏற்பட்டுஉள்ளது. பல வாகனங்கள் தகுதியிழந்தும் மீண்டும் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
அரசு வழங்கும் வாகனங்களை, ஒவ்வொரு துறையும், குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது பயன்படுத்த வேண்டும். இல்லையேல், 2.5 லட்சம் கி.மீ., துாரமாவது வாகனம் ஓட்டியிருக்க வேண்டும். அதன்பிறகே தகுதியிழப்பு செய்யப்பட வேண்டும் என்பது அரசு விதி.
இந்த விதி, ஏட்டளவில் உள்ளதே தவிர, யாரும் பின்பற்றுவதாக தெரியவில்லை. வாகனம் வழங்கப்பட்டு சில ஆண்டுகளிலே, மூலையில் முடக்கப்பட்டு விடுகிறது.
காரணம், அதை பயன்படுத்தும் அதிகாரிகளோ, டிரைவரோ, அதன் பராமரிப்பில் அக்கறை காட்டுவதில்லை.
அதன்விளைவாக, மிகக்குறுகிய காலத்திலே, அதன் ஆயுள் முடியும் நிலை ஏற்படுகிறது.
இவ்வாறு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயுள் முடிந்து முடக்கப்பட்ட வாகனங்கள், ஒவ்வொரு துறையிலும் ஒன்றிரண்டு வீதம் குப்பை போல கிடக்கிறது.
அரசு விதியில் உள்ள 10 ஆண்டுகளை கடத்துவதற்காக, அதிகாரிகள் அவற்றை மண்ணோடு மண்ணாக மக்கிப்போக வைத்துள்ளனர்.
கூடுதல் வேலைப்பளு
அதன் பிறகு ஏலம் விடுவதற்கு, உயர் அதிகாரிகளின் ஒப்புதல் வாங்குதல், ஏலத்திற்கு அறிவிப்பு செய்தல் போன்ற பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியுள்ளது.
இவற்றை கூடுதல் வேலைப்பளுவாக கருதி, அப்படியே விட்டு விடுகின்றனர்.
இதனால் அவ்வாகனங்கள் பழைய இரும்பு கடைகளுக்கு கூட போட முடியாத பயனற்ற நிலைக்கு சென்று விடுகிறது.
ஒவ்வொரு துறை அலுவலகங்களின் வாசலிலும் இந்த மாதிரியான வாகனங்கள் பல நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை காணலாம்.
உயர் பதவியில் இருப்போர் மட்டுமல்லாமல், சாதாரண அதிகாரிகளுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் கூட, தனி வாகனங்கள் வழங்கப்படுகின்றன.
இதனால், கண்டமாகும் வாகனங்களின் எண்ணிக்கையும், ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீசார் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தன. அவற்றையே கடந்தாண்டு ஜனவரியில் தான் ஏலம் விட்டனர்.
தகுதியிழப்பு செய்யப்பட்ட வாகனங்கள் ஒரு புறம் இருக்க பழுதடைந்து கிடக்கும் வாகனங்கள் பல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளன. சில அதிகாரிகளுக்கு வாகனங்களே இன்றி சிரமப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலருக்கே வாகனம் இல்லாமல், மாவட்ட கலெக்டரின் கூடுதல் வாகனம் ஒன்றை பயன்படுத்தி வருகிறார்.
அதேபோல, மாவட்ட வழங்கல் அலுவலர், சமூக பாதுகாப்பு திட்டம் குன்றத்துார் மற்றும் வாலாஜாபாத் ஆகிய அதிகாரிகளுக்கு வாகனங்களே இன்றி சிரமப்படுகின்றனர்.
இருசக்கர வாகனங்களில் சென்று ஆய்வு செய்ய வேண்டிய நிலை இவர்களுக்கு உள்ளது.
ஓட்டை உடைசல்
அதேபோல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் உத்திரமேரூர் தாசில்தார் வாகனங்கள் பழுதாகி கிடக்கிறது.
காஞ்சிபுரம் குடிமை பொருள் தாசில்தார் வாகனமும் தகுதியிழப்பு செய்த பிறகும் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
பழுதடைந்த மற்றும் பராமரிப்பில்லாத வாகனங்களை கொண்டு ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் செல்வதாக பலரும் புலம்புகின்றனர்.
அதேபோல், ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களின் வாகனங்கள் பல ஓட்டை உடைசலுடன் இருக்கிறது. மழைக்காலங்களில், மழை நீர் ஒழுகும் நிலையில் வாகனம் இருந்து வருகிறது.
எத்தனை வாகனங்கள் தகுதியிழப்பு செய்ய வேண்டும் என, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் விபரம் கேட்டிருப்பதாக, ஊரக வளர்ச்சித் துறையின் அதிகாரிகள் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வருவாய் துறையில் தகுதியிழப்பு செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் - பொது புண்ணியக்கோட்டியிடம் கேட்டபோது, ''தகுதியிழப்பு செய்த வாகனங்கள் குறித்து விபரங்கள் பெற்றிருக்கிறோம். அதேபோல், அனைத்து அதிகாரிகளுக்கும் வாகனங்கள் உள்ளன.
''வாகனங்கள் இன்றி அதிகாரிகள் இருப்பதாக கூறுவது உண்மையில்லை என நினைக்கிறேன். வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்திற்கு வாகனங்கள் பற்றிய விவரங்கள் அனுப்பியிருக்கிறோம்,'' என்றார்.
ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மட்டுமல்லாமல், ஒன்றியக்குழு தலைவர்களுக்கும் அரசு வாகனங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், மாவட்டத்தில் உள்ள ஐந்து ஒன்றியங்களில் வாகனங்கள் இன்றி ஒன்றியக்குழு தலைவர்கள் தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டபோது, 'பிப்ரவரி மாதம் ஒன்றியக்குழு தலைவர்களுக்கு வாகனங்கள் வந்துவிடும்' என்றனர்.