ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சி.எம்.டி.ஏ., 'அசிஸ்டன்ட் பிளானர்' இரண்டு ஆண்டுகளாக வராததால், அங்கு இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் கொடுத்து சி.எம்.டி.ஏ., அனுமதி பெறும் நிலை உள்ளது. இதனால் ஏராமான 'பைல்'கள் தேக்கம் அடைந்துள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இதில் 21 ஊராட்சிகள் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் எனப்படும் சி.எம்.டி.ஏ., எல்லையில் உள்ளது.
குன்றத்துார் ஒன்றியத்தில் உள்ள இந்த 21 ஊராட்சிகளில் லே--அவுட் மற்றும் கட்டடம் கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ.,விடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டியது அவசியம்.
இதற்காக, படப்பையில் உள்ள குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சி.எம்.டி.ஏ., சார்பில் சுழற்சி முறையில் மாதத்திற்கு 'அசிஸ்டன்ட் பிளானர்' அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அலுவலர், திங்கள் முதல் வெள்ளி வரை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்து மக்களை சந்தித்து, சி.எம்.டி.ஏ., விண்ணப்ப மனுக்களையும், கட்டுமான இடத்தையும் சரிபார்த்து அனுமதி வழங்க வேண்டும்.
ஆனால், இரண்டு ஆண்டுகளாக அசிஸ்டன்ட் பிளானர் வட்டார வளர்ச்சி அலுவலகம் வருவதே இல்லை. இதனால், சி.எம்.டி.ஏ.,வுக்கு விண்ணப்பிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மனுக்கள் தேக்கம் அடைந்துள்ளன.
இதை சாதகமாக பயன்படுத்தி இடைத்தரகர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சி.எம்.டி.ஏ.,விற்கு விண்ணபிக்க வரும் மக்களை சந்தித்து கட்டடத்திற்கு ஏற்ப 20 ஆயிரம் மூதல் 50 ஆயிரம் பணம் பெற்று சென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ., அலுவலகத்திற்கு சென்று அசிஸ்டன்ட் பிளானரை சந்தித்து லஞ்ச பணம் கொடுத்து சி.எம்.டி.ஏ., அனுமதியைப் பெற்று வருகின்றனர்.
இதனால், குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சி.எம்.டி.ஏ., அனுமதி பெற்று தரும் இடைத்தரகர்கள் அதிகரித்துள்ளனர். பணம் உள்ளவர்கள் மட்டுமே சி.எம்.டி.ஏ., அனுமதி பெற முடியும் என்ற நிலை உள்ளது.
சி.எம்.டி.ஏ., அனுமதி பெற முடியாததால் பலர் வீடு கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
சி.எம்.டி.ஏ.,வுக்கு விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான மனுக்கள் நிலுவையில் உள்ளதால், சி.எம்.டி.ஏ.,வுக்கு செல்ல வேண்டிய வருவாய், உள்ளாட்சி துறைக்கு செல்ல வேண்டிய வருவாய், பத்திர பதிவுத் துறைக்கு செல்ல வேண்டிய வருவாய் தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில் சி.எம்.டி.ஏ., அசிஸ்டனட் பிளானர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வராததால் ஊழல் அதிகரித்துள்ளது.
எனவே, சி.எம்.டி.ஏ., அசிஸ்டன்ட் பிளானர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்து செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.