காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று ரத சப்தமி உற்சவம் நடந்தது. இதில் காலையில் தங்க சூரிய பிரபை வாகனத்திலும் மாலையில் சந்திர பிரபை வாகனத்திலும் பெருமாள் மாடவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ரத சப்தமி உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை 7:00 மணிக்கு, பெருமாள் வாகன மண்டபத்தில் எழுந்தருளி, தங்க சூரிய பிரபை வாகனத்தில் புறப்பட்டார்.
கோவில் உள்பிரகாரத்தில் சுற்றி வந்தார். இதையடுத்து, வெளிமாட வீதியில் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின் காலை 10:00 மணிக்கு, கண்ணாடி அறைக்கு திரும்பிச் சென்ற பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது.
இதைத் தொடர்ந்து, அலங்காரம் முடிந்ததும் பக்தர்களுக்கு கண்ணாடி அறையில் தரிசனம் நடந்தது.
அதே போல, மாலை 6:00 மணிக்கு பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்திற்கு சென்றார். அங்கு சந்திர பிரபை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, மாட வீதிகளில் சுற்றி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.