உத்திரமேரூர், குடியரசு தினத்தையொட்டி, சிறுதாமூரில் நடைபெற்ற கூட்டத்தை செல்லாது என அறிவித்து, மறு கூட்டம் நடத்த வேண்டும் என காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சிறுதாமூர் ஊராட்சி, அருங்குன்றம் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர், காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தியிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுதாமூர் ஊராட்சியில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதியில், கடந்த 26ம் தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில், 30க்கும் குறைவான நபர்களே பங்கேற்றனர்.
ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 2 பேர் கலந்துக் கொள்ளவில்லை. ஊராட்சி ஒன்றியம் சார்பிலான பற்றாளர் கூட்டத்திற்கு வரவில்லை.
இதுகுறித்து, நான் கேள்வி எழுப்பியபோது, ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் எவரும் முறையான பதில் அளிக்க வில்லை.
மேலும், சிறுதாமூர் ஊராட்சியில் தனியார் கல் குவாரிகள் அமைக்க இனி அனுமதி இல்லை எனவும், செயல்படும் குவாரிகள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டியும் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியபோது, அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் மறுப்பு தெரிவித்தார்.
எனவே, சிறுதாமூர் ஊராட்சியில், 26ம் தேதி நடந்த கிராமசபை கூட்டம் செல்லாது என அறிவித்து, விதிமுறைகளுக்கு உட்பட்டு மறு கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.