தினமும் புதுப்புது யுக்தியுடன் வலைவிரிக்கும் 'சைபர்' குற்றவாளிகளின் சிக்காமல் இருக்க, விழிப்புடன் இருக்க வேண்டும் என, பொது மக்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
'ஸ்மார்ட் போன்' பயன்படுத்துவோரின், 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு 'லிங்க்' ஒன்று வருகிறது.
அதில், 'உங்களுக்கு வங்கி, வீட்டு கடன் கேட்டு தேவையற்ற அழைப்புகள் வருகிறதா, அதுபற்றி புகார் தெரிவிக்க, இந்த 'லிங்க்'கை 'கிளிக்' செய்யுங்கள்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
நாமும், 'தொல்லை ஒழிந்தால் போதும்' என, அந்த 'லிங்க்'கை கிளிக் செய்தால், 'கஸ்டமர் சர்வீஸ்' என குறிப்பிட்ட 'மொபைல் போன்' எண்ணை தொடர்பு கொண்டதும், மொபைல் போனுக்கு 'ஒன்டைம் பாஸ்வேர்டு' எனும் ஓ.டி.பி., எண் வருகிறது.
எதிர்முனையில் இருப்பவரின் பேச்சை நம்பி, ஓ.டி.பி., எண்ணை தெரிவித்தால், கண் இமைக்கும் நேரத்தில் வங்கிக் கணக்கில் இருந்து பணம் களவாடப்படுகிறது.
தவிர, எதிர்முனையில் பேசுபவரை நம்பி, மற்றொரு மொபைல் போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினாலும், பணம் திருடப்படுகிறது.
சமீபத்தில், சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் இருந்து, ஒன்பது நிமிடங்களில், 2.45 லட்சம் ரூபாயை, 'சைபர் க்ரைம்' குற்றவாளிகள் சுருட்டி உள்ளனர். தற்போது, இந்த வகையான மோசடி அதிகரித்து வருகிறது.
சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
நைஜீரியாவைச் சேர்ந்த நபர்கள், டில்லியில் முகாமிட்டு, இது போன்ற மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்ணுக்கு தெரியாமல், எங்கிருந்தோ இயக்கும் மர்ம நபர்களை நம்பி, பொதுமக்கள், ஓ.டி.பி., எண் மட்டுமல்ல, எந்த தகவலையும் பகிர வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சைபர் கிரைம் குற்றவாளிகள், 'நீங்கள் கடந்த மாதம் செலுத்திய மின் கட்டணம் இணையத்தில், 'அப்டேட்' ஆகவில்லை. உடனடியாக 'ஆன்லைன்' வாயிலாக கட்டணம் செலுத்த வேண்டும். தவறினால், உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்படும்' என, மோசடி செய்து வருகின்றனர்.
தவிர, மத்திய அரசிடம் இருந்து வங்கி கடன் பெற்று தருவதாக விவசாயிகளை குறி வைத்து, 'சைபர் கிரைம்' குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மொபைல் போன் எண்ணிற்கு பல லட்சம் ரூபாய் பரிசுப் பொருள் விழுந்துள்ளது. அதை எடுக்க, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்றும், மோசடிக்கு வலை விரிக்கின்றனர்.
இந்த வழியில் புதுப்புது யுக்தியை, 'சைபர் க்ரைம்' மர்ம நபர்கள் கையாண்டு வருகின்றனர். அவர்களின் வலையில் சிக்காமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
- நமது நிருபர் -