திருத்தணி, திருத்தணியில், விளையாட்டாக தீப்பெட்டியில் இருந்து குச்சிகளை வைத்து உரசியதில், அங்கிருந்த பட்டாசு திரிகள் தீப்பற்றி எரிந்ததில், மூன்று பேர் காயமடைந்தனர்.
அதையடுத்து, பட்டாசு கோடவுனுக்கும், கடைக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி நக்மா வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் உரிய அனுமதியின்றி, பட்டாசு கிடங்கில் இருந்து பட்டாசு திரிகளை தங்களது வீட்டிற்கு கொண்டு வந்து வெயிலில் காய வைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நக்மாவின் குழந்தைகள் அஸ்வின், 3, அனுபல்லவி, 2, ஆகியோர் விளையாட்டாக தீப்பெட்டியில் இருந்து குச்சிகளை வைத்து உரசியதில் பட்டாசு திரிகள் தீப்பற்றி எரிந்தன.
இதில் இரு குழந்தைகள் பலத்த தீக்காயம் அடைந்து அலறல் சத்தம் கேட்டு, அங்கு சென்ற நக்மா குழந்தைகளை காப்பாற்ற முயன்ற போது, அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
இவர்கள் மூன்று பேரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஹஸ்ரத்பேகம், தாசில்தார் வெண்ணிலா பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
பின் உரிய அனுமதியின்றி, பட்டாசு திரிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்பிய திருத்தணி ரெட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த அப்துல்மாலிக் மகன் முகமது அலி, 51, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அனுமதியின்றி இயங்கிய பட்டாசு கிடங்கு மற்றும் திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள கடைக்கும் வருவாய்த் துறை அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர்.