கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த, மாதர்பாக்கம் அருகே, பல்லவாடா கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ்குமார், 46. அ.தி.மு.க., பிரமுகர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி ரோஜா, 44. அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர். இம்மாதம், 24ம் தேதி, ரோஜா, அவரது மகன் ஜேக்கப், 22, ஆகியோரை மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி மற்றும் கத்தி முனையில், ரோஜாவின் காரில் கடத்தி சென்றனர்.
பாதிரிவேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், அன்று இரவே, இருவரும் காரில் வீடு திரும்பினர். இருவரிடம் விசாரித்தபோது, கடத்திய நபரில் ஒருவர் பரிதாபப்பட்டு விடுவித்ததாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், இருவரையும் கடத்திய, பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்த சுரேந்தர், 26, கும்புளி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ், 26, ஆந்திர மாநிலம் வரதையாபாளையம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், 34, நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த நவீன், 28, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
விசாரணையில், நிலம் விற்ற வகையில், ரமேஷ்குமார் ஏமாற்றியதாலும், தொடர்ந்து இடையூறு அளித்ததாலும் ஆத்திரம் அடைந்த சுரேந்தர், கூட்டாளிகளுடன் சேர்ந்து, கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.
பீஹாருக்கு சென்ற போது வாங்கிய சிறிய ரக துப்பாக்கியை கடத்தலுக்கு பயன்படுத்தியுள்ளார். இருவரையும் ஆந்திர பகுதியில் உள்ள காட்டிற்கு கடத்திச் சென்ற நிலையில், நிலைமையை அறிய பல்லவாடா கிராமத்திற்கு, சுரேந்தர் சென்றுள்ளார்.
இரு மாநில போலீசார் தேடுதல் வேட்டை குறித்து அறிந்து, நிலைமையின் விபரீதம் உணர்ந்த சுரேந்தர் அச்சம் அடைந்துள்ளார். அவர் யோசனைப்படி, கடத்திய இருவரையும் தப்பிக்க விடுவது போல நாடகமாடி, தப்பிக்க விட்டது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
பாதிரிவேடு போலீசார், நான்கு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த துப்பாக்கி, கத்திகளை பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.