செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த, மேலமையூர் ஊராட்சியில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், ரயில்வே தண்டவாளம் பகுதியில், பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பாலம் வழியாக, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அத்தியாவசிய பணி மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உட்பட ஏராளமானோர், சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கன மழையில், பாலம் பகுதியில், மழை நீர் தேங்கியது. இதனால், மக்கள் செல்ல முடியாததாலும், இருசக்கர வாகன ஓட்டிகளும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
தற்போது, 5 கி.மீ., துாரம் சுற்றி, பிற இடங்களுக்கு சென்று வருகின்றனர். பாலப்பகுதியில் உள்ள, மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
எனவே மழைநீரை அகற்ற, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.