செய்யூர், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பகுதி சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் இரு சக்கர வாகனம், ஆட்டோ, கார், லாரி, பேருந்து என தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
மூன்று ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் சாலையில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
நெடுஞ்சாலைத் துறை அவசர கால நிதியில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டம், முகையூர் முதல் விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு வரை 55 கிலோ மீட்டர் பழுதடைந்துள்ள சாலையை, சீரமைக்கும் பணியில் கடந்த 20 நாட்களாக நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலையில் சேதமடைந்த பகுதியை அகற்றி , சீரமைப்பு பணி நடைபெற்றுள்ள நிலையில், தற்போது சாலையோர தடுப்பு சுவர்களுக்கு வண்ணம் பூசும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபடுகின்றனர்.