மேல்மருவத்துார்,
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 'ரோபோடிக்ஸ்' அறுவை சிகிச்சை துவக்க விழா, ஆதிபராசக்தி கல்வி, கலாச்சார மருத்துவ அறக்கட்டளை துணை தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், மருத்துவக்கல்லுாரி வளாகத்தில், நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
இதில், மருத்துவ கல்லுாரி இயக்குனர் டாக்டர் ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.
ஆதிபராசக்தி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முட நீக்கியல் மருத்துவ நிபுணர் குழுவானது, ரோபோடிக்ஸ் இயந்திரம் வாயிலாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை, மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு ஒரு முடநீக்கியல் மருத்துவ கலந்தாய்வை நடத்தியது.
ஆதிபராசக்தி சித்தர் பீட, பங்காரு அடிகளார் 83வது பிறந்தநாளை முன்னிட்டு, இரண்டாம் முறையாக இந்த ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது.
இதில், 15 ஏழை பயனாளிகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நேரடி அறுவை சிகிச்சை ஒளிபரப்பு கலந்தாய்வின் வாயிலாக, மருத்துவ கல்வி பயிலும், மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப முறையில், ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிந்து கொள்வதன் வாயிலாக, அவர்களின் மருத்துவ கல்வி அறிவுத்திறமை மேம்படுகிறது. இதில், 200க்கும் மேற்பட்ட முடநீக்கியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று, துறையில் ஏற்பட்டுள்ள, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியினை அறிந்து கொண்டனர்.
இதுகுறித்து, ஆதிபராசக்தி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முட நீக்கியல் துறை தலைமை மருத்துவர் ஜெயபிரகாஷ் கூறியதாவது;
ஆதிபராசக்தி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், நேரடி முட நீக்கியல், தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லுாரிகளில் முதல் முதலில் ரோபோடிகஸ் அறுவை சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சை வாயிலாக அறுவை சிகிச்சையின் போது, ஏற்படும் சிறு குறைகளை களைந்து, அறுவை சிகிச்சையின் தரத்தை மேம்படுத்த முடியும்.
இவ்வாறு, அவர், தெரிவித்தார்.