செங்கல்பட்டு, :
செங்கல்பட்டு மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்புக்களில் துாய்மை பாரத இயக்கத்தின் வாயிலாக, 28.81 கோடி ரூபாய்க்கு திட்டப் பணிகள் செயல்படுத்துவது துவக்கப்பட்டு உள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஊராட்சிகளுக்கு, வாகனங்கள் மற்றும் பணியாளர்களுக்கு உபரகணங்கள் விரைவில் வழங்கப்படும் என, ஊரக வளர்ச்சித் துறையினர் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
சென்னைக்கு புறநகர் மாவட்டம் என்பதால், அனைத்து ஊராட்சிகளிலும், துாய்மையாக இருக்க, மத்திய அரசு துாய்மை பாரத இயக்க திட்டம் வாயிலாக, வாகனங்கள் மற்றும் துாய்மை காவலர்களுக்கு கொடுக்கப்படும் உபகரணங்களுக்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தில், சிறப்பாக செயல்பட்ட 16 ஊராட்சிகள் தன்னிறைவு பெற்றுள்ளன. இந்த ஊராட்சிகளில், துாய்மை பணிக்கு, பல்வேறு திட்டப் பணிகளை, செய்து வருகின்றனர்.
அனைத்து ஊராட்சிகளில், 150 வீட்டிற்கு ஒரு துாய்மை காவலர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வாயிலாக, வீடுகளில் இருந்து குப்பை வாங்கி, கிடங்கிற்கு கொண்டு வருகின்றனர்.
இங்கு, மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கப்படுகிறது. அதன்பின், உரக் குழியில், மக்கும் குப்பை கொட்டி உரமாக மாற்றப்படுகிறது.
இதை ஊராட்சிகளில் விற்பனை செய்யப்படுகிறது. மக்காத குப்பையை மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகளில், மின்கல வண்டி 662, தள்ளுவண்டி, மிதிவண்டி 520, மோட்டார் வாகனங்கள் 168 மற்றும் மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய், துாய்மை காவலர்களுக்கு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அவற்றுக்கு துாய்மை பாரத இயக்க திட்டத்தின் வாயிலாக 28 கோடியே 81 லட்சம் ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்திட்டத்திற்கு 'டெண்டர்' விடப்பட்டு, மத்திய அரசு நிறுவனத்திடம் வாகனங்கள் வாங்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்திலேயே, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால், அனைத்து ஊராட்சிகளிலும், தெருக்களில் மழை நீர், கழிவு நீர் செல்வதை தடுக்க, கால்வாய்கள் கட்டி, முறையாக செயல்படுத்த உள்ளனர். இத்திட்டம் விரைவில் செயல்படுத்த உள்ளது என, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாதிரி ஊராட்சிகள்
மாவட்டத்தில், அவுரிமேடு, அரியனுார், வெள்ளபுத்துார், பாபுராயன்பேட்டை, மேல்மருவத்துார், புதுார், கீழச்சேரி, சீவாடி, பெரியகாட்டுப்பாக்கம், அழகுசமுத்திரம், காரணை, வெளிச்சை, பெரியபுத்தேரி, வில்லியம்பாக்கம், திருவஞ்சேரி, மூவரசம்பட்டு ஆகிய ஊராட்சிகள் மாதிரி ஊராட்சிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாவட்டத்தில், துாய்மை பாரத இயக்க திட்டத்தில், 28 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது.
ஊராட்சிகளுக்கு, வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் விரைவில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அச்சிறுப்பாக்கம் 59 67 62மதுராந்தகம் 58 82 203சித்தாமூர் 43 49 12லத்துார் 41 55 101திருக்கழுக்குன்றம் 54 70 102திருப்போரூர் 50 148 ---காட்டாங்கொளத்துார் 39 101 40புனிததோமையார்மலை 15 90 ----மொத்தம் 359 662 520
ஆண்டு ரூ. கோடி2021- - 22 3,27,26,7502021- - 22 மாதிரி ஊராட்சி 51,10,2102022- - 23 5,42,68,9652022- - 23 பகுதி 2 19,60,65,049மொத்தம் 28,81,70,974