மாமல்லபுரம்,மாமல்லபுரத்தில் பேரூராட்சி அலுவலக முகப்பு பகுதியை அடைத்து நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள், அலுவலக மறைப்பு விளம்பர பதாகைகளுக்கு, பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக தடைவிதித்துள்ளது.
மாமல்லபுரம், பல்லவர் கால பாரம்பரிய நினைவுச் சின்னங்களுக்கு புகழ் பெற்றது. இங்கு கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு என, கலைச்சிற்பங்கள் உள்ளன.
இந்திய, சர்வதேச பயணியர், இவற்றைக் காண, சுற்றுலா வருகின்றனர். சிற்பங்களால் மட்டுமே புகழ்பெற்ற இங்கு, தற்போது சர்வதேச நிகழ்வுகள் நடந்தும் சர்வதேச கவனம் பெறுகிறது.
இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஜீ ஜின்பிங், 2019ல், முறைசாரா மாநாடாக, இங்கு சந்தித்தனர். அடுத்து, 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த ஆண்டில் நடந்தது.
ஜி - 20 நாடுகளின் பிரதிநிதிகள், பிப்.,1ல், சிற்பங்களைக் காண வருகின்றனர். மார்ச்சில், ஜி - 20 நாடுகள் மாநாடும் நடக்கிறது.
இத்தகைய சர்வதேச சிறப்பு பெற்ற பகுதியை, அரசுத் துறையினர், முறையாக பராமரிப்பது அவசியம். பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறையினர் அலட்சியப்படுத்துகின்றனர்.
குறிப்பாக, பயணியர் குவிந்து, களைகட்டும் சூழலிலும், சுற்றுலாவிற்கு இடையூறாக, பேரூராட்சி அலுவலக முகப்புப் பகுதியில், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் என நடத்தப்படுகின்றன.
பேரூராட்சி அலுவலக பகுதி, கிழக்கு ராஜ வீதி, திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலை, கங்கைகொண்டான் மண்டபம் தெரு என இணைந்த, குறுகிய சந்திப்பு பகுதியாக உள்ளது.
பொதுக்கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடக்கும்போது, இப்பகுதி, சில மணி நேரம் ஸ்தம்பிக்கிறது.
வாகனங்களை தடுத்து, போக்குவரத்து முடங்கியும்,. திரண்ட கூட்ட இரைச்சலாலும், இப்பகுதியினர், பயணியர் பாதிக்கப்படுகின்றனர்.
சரமாரியாக வெடி வெடித்து சுற்றுச்சூழல் பாதிக்கிறது. இச்சூழலால், சர்வதேச பயணியர் அருவருக்கின்றனர்.
பேரூராட்சி அலுவலகத்தை அடைத்து நடத்துவதால், அலுவலக பணிகளும் பாதிக்கப்படுகின்றன. உச்சகட்ட அவலமாக, அலுவலக வளாகத்தை முற்றிலும் மறைத்து, பிரமாண்ட பதாகைகள் அமைக்கப்பட்ட கேலிக்கூத்தும் அரங்கேறுகிறது.
அலுவலகக் கட்டடத்தின் முகப்பு, இவ்வூர் பாரம்பரிய தன்மைக்கேற்ப, அழகிய சுதைச் சிற்பங்கள் மண்டப தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
நுழைவிடப் பகுதியில், நீரூற்றும் பெண், கொக்குகள் இரைதேடும் பசுமை புல்வெளி என அமைந்து, இப்பகுதியை கடந்து செல்வோரை கவர்கிறது.
இத்தகைய அழகிய முகப்புப் பகுதியை மறைத்து, அரசியல் கட்சியினர், சினிமா ரசிகர்கள், பிரமாண்ட பதாகை அமைத்து மறைக்கின்றனர். நினைவஞ்சலி பதாகை அதிகரிக்கிறது.
நிகழ்விற்கு பின், அவற்றை அகற்றாமல், பல நாட்களுக்கு நீடித்து, நாளடைவில் நைந்து கிழிந்து தொங்குகிறது.
அரசியல் கட்சி சார்ந்த அமைப்பின் கொடி, பெயர்ப்பலகை கல்வெட்டு, அலுவலக நுழைவுப் பகுதியில், நிரந்தரமாக அமைக்கப்பட்டு உள்ளது.
அலுவலக முகப்பில் பதாகை வைக்காமல் தடுக்க, பேரூராட்சி மன்றம், 2015ல் இதுகுறித்து தீர்மானம் இயற்றி, நிரந்தரமாக தடுக்கப்பட்டது.
தற்போதைய நிர்வாகம், தடுக்கவோ, அகற்றவோ முயற்சிக்காமல் தயங்குகிறது.
இச்சூழலில், நேற்று முன்தினம், பேரூராட்சி தலைவர் வளர்மதி தலைமையில், மன்ற கூட்டம் நடந்தது.
உறுப்பினர்கள், செயல் அலுவலர் கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அலுவலக பகுதியில், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என நடத்தவோ, பதாகை, கல்வெட்டு அமைக்கவோ கூடாதென, உறுப்பினர்கள் கடித அடிப்படையில், 29ம் தீர்மானமாக இயற்றி, தடை விதிக்கப்பட்டது.
பேரூராட்சி அலுவலகப் பகுதியில், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதையும், பதாகை வைப்பதையும் தடுக்க, தடை விதித்து தீர்மானம் இயற்றி உள்ளோம். இதுகுறித்து, அரசியல் கட்சிகள், அமைப்பினரிடம் தெரிவித்து, இச்செயல்களை தவிர்க்க அறிவுறுத்துவோம். தடையை மீறினால், மற்ற நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கிறோம்.
- வெ.கணேஷ்,
செயல் அலுவலர், மாமல்லபுரம் பேரூராட்சி.