விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே, கரும காரிய கொட்டகை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி தலைவர் மனு அளித்ததால், பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மங்கலம்பேட்டை அடுத்த சிறுவம்பார் கிராமத்திற்கு சொந்தமான இடத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம், பாலி புதுகாலனி மக்களுக்கு கரும காரிய கொட்டகை அமைக்கும் பணி நடக்கிறது.
இந்நிலையில், பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்களுக்கு, தங்கள் பகுதியில் கரும காரிய கொட்டகை அமைக்கக் கூடாது என சிறுவம்பார் ஊராட்சி தலைவர் ஜெயக்கொடி கோவிந்தராசு மற்றும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், கட்டுமான பணி தொடர்ந்து நடந்து வந்தது.
பணி தொடர்ந்து நடந்தால், இரண்டு கிராம மக்களிடையே பிரச்னை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது; இதனால், பணியை நிறுத்த வேண்டும் என, மங்கலம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில், சிறுவம்பார் ஊராட்சி தலைவர் ஜெயக்கொடி கோவிந்தராசு புகார் மனு அளித்தார்.
அதன்பேரில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமலதா, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோரை கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, இரு தரப்பினரையும் அழைத்து, சுமூகத் தீர்வு ஏற்பட்ட பின் கட்டுமானப் பணியை தொடர வேண்டும் எனவும், அதுவரை கட்டுமானப் பணிகளை நிறுத்தவும் அறிவுறுத்தினர்.
இதனையடுத்து, கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.