மதுரை : ''மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம்வரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது ,'என, சென்னை மெட்ரோ ரயில் இயக்குனர் அர்ச்சுனன் பேசினார்.தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார்.
சென்னை மெட்ரோ ரயில் இயக்குனர் (திட்டம்) அர்ச்சுனன் பேசியதாவது:'மெட்ரோ ரயில் திட்டம் பாதுகாப்பானது; நம்பகத்தன்மைமிக்கது. சென்னையில் 54 கி.மீ.,துாரம் தற்போது இயக்கப்படுகிறது.
ரயில்வே ஸ்டேஷன், ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களை இணைக்கிறது. டிரைவர் பெயரளவிற்குத்தான் இருப்பார். ஜி.பி.எஸ்.,தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படுகிறது. கட்டணம் ரூ.10 முதல் 45 வசூலிக்கப்படுகிறது. இரண்டாம் கட்ட திட்டப் பணியில் முற்றிலும் டிரைவர் இன்றி ரயில் இயக்கப்படும்.
மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிதி பெற தமிழக அரசு மத்திய அரசின் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கும். ஒசூர்-பெங்களூரு திட்டப் பணி ஆய்வில் உள்ளது.
மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம்வரை 31 கி.மீ.,துாரம் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். 17 நிறுத்தங்கள் இடம்பெறும். கோரிப்பாளையம், வசந்தநகரில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். திட்ட மதிப்பு ரூ.8 ஆயிரம் கோடி. 4 ஆண்டுகளில் பணி நிறைவடையும். ஹாங்காங்கில் மால்கள், அடுக்குமாடி குடியிருப்புகளை இணைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.சங்க செயலாளர் செல்வம், பொருளாளர் ஸ்ரீதர், துணைத் தலைவர்கள் ஜீயர்பாபு, இளங்கோவன், இணைச் செயலாளர் சுந்தரலிங்கம், பன்னாட்டு வணிக மேம்பாட்டுக்குழு உறுப்பினர் ராகேஷ் குமார் பங்கேற்றனர்.