திட்டக்குடி : திட்டக்குடியில் மின்சாரம் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு நஷ்டஈடு, அரசு வேலை வழங்கினால் மட்டுமே, உடலைப் பெறுவோம் என, சமாதானக்கூட்டத்தில் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் தெரிவித்தனர்.
திட்டக்குடி அடுத்த கோழியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு மனைவி மலர்க்கொடி, 48;கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம், திட்டக்குடி பொன்னுசாமி நகரில் உள்ள வீட்டில் சித்தாளாக கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இறந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். மலர்க்கொடிக்கு, தங்கதுரை, 26; தினேஷ்,23, என இரண்டு மகன்கள் உள்ளனர்.
மலர்க்கொடி குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈடு வழங்கக் கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், இல்லாவிட்டால் உடலை பெற மாட்டோம் என அவரது உறவினர்கள் அறிவித்தனர். இதையடுத்து திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கார்த்திக் தலைமையில் சமாதானக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் நகராட்சி, மின் வாரியம், வருவாய் ஆகிய துறைகளின் அதிகாரிகள், அனைத்துக்கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். நஷ்டஈடு மற்றும் அரசு வேலை கோரிக்கையை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால், சமாதானக் கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.
மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டித்து, திங்கள்கிழமை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அனைத்துக்கட்சி பிரமுகர்கள் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர். இதனால், பரபரப்பு நிலவியது.