ப.வேலுார், ஜன. 29--
கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் தாலுகா, கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதேபோல், இந்தாண்டுக்கான திருவிழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி காலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், பக்தர்களின் அரோஹரா கோஷத்துடன் கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனையும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூச தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும், 5ம் தேதி காலை, 5:00 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தினந்தோறும் காலை பல்லக்கு உற்சவமும், இரவு அன்ன, ரிஷப, மயில், யானை, புஷ்ப, குதிரை வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.