நாமக்கல், ஜன. 29-
'வீசாணம் கிராம விவசாயிகளுக்கு, 'ட்ரோன்' மூலம் 'நானோ யூரியா' தெளிப்பு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது' என, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு:
நாமக்கல் வட்டாரம், வீசாணம் கிராமத்தில் வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் செயல்படும், 'அட்மா' திட்டத்தில், செயல் விளக்க திடல் அமைத்தல் இனத்தின் கீழ், வீசாணம் கிராமத்தில், 'ட்ரோன்' மூலம் 'நானோ யூரியா' தெளித்தல் நிகழ்ச்சி செயல் விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது. மேலும், நானோ யூரியா சிறந்த மகசூலை பெற, இலைவழி தெளிப்பாக 2 முறை பயன்படுத்தவும், 1ம் தெளிப்பு, 30--35 நாட்களிலும், 2ம் தெளிப்பாக பூப்பதற்கு முன்பாக அல்லது முதல் தெளிப்பிலிருந்து, 20--25 நாட்கள் இடைவெளியில் தெளித்து பயன் பெறலாம் என விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், நாமக்கல், உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் நாச்சிமுத்து, 'நானோ' யூரியாவால் விவசாயிகளுக்கு வருமானம் கூடுதலாக கிடைக்கிறது என, விளக்கமளித்தார். இந்நிகழ்ச்சியில், உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் தனலட்சுமி, நாமக்கல் வட்டார வேளாண்மை அலுவலர் மோகன் உதவி வேளாண்மை அலுவலர் கோபிநாத், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.