சேந்தமங்கலம், ஜன. 29-
சேந்தமங்கலத்தில் நேற்று முன்தினம், பொலிரோ காரில் கள்ள நோட்டு மாற்ற காத்திருந்த கொல்லிமலையை சேர்ந்த, மூவரை கைது செய்து, தலைமறைவான கும்பல் தலைவனை பிடிக்க, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
சேந்தமங்கலத்தில் நேற்று முன்தினம், பஞ்சர் கடை அருகே நீண்ட நேரமாக பொலிரோ கார் ஒன்று சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தது. தகவலறிந்த சேந்தமங்கலம் போலீசார் அங்கு சென்று காரில் சோதனையிட்டனர். அப்போது காரில் பதுக்கி வைத்திருந்த, 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 500 ரூபாய் கள்ள நோட்டு கட்டுகளையும், அதற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், காரிலிருந்த கொல்லிமலை, சோளக்காடு அரியூர் பகுதியை சேர்ந்த செல்லதுரை, 45, வாழவந்திநாடு, எல்லக்கிராய்பட்டியை சேர்ந்த சதாசிவம், 42, புத்துார்பட்டியை சேர்ந்த சிலம்பரசன், 36, ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கள்ள நோட்டு கும்பல் தலைவன், பொலிரோ காரின் உரிமையாளர் கொல்லிமலை, வளப்பூர் நாடு பகுதியை சேர்ந்த சிவப்பிரகாசம் என்பது தெரியவந்தது. தகவலறிந்து தலைமறைவான சிவப்பிரகாசத்தை பிடிக்க, போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.