புகையிலை விற்றவர் கைது
குமாரபாளையம், ஜன. 29-
குமாரபாளையம், சுந்தரம் நகர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று மதியம், 1:00 மணியளவில் எஸ்.ஐ., சேகரன் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பழக்கடை ஒன்றில் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து, சசி, 31, என்பவரை கைது செய்தனர்.
தீ விபத்தில் 6 ஆடு பலி
சேந்தமங்கலம், ஜன. 29-
சேந்தமங்கலம் அடுத்த கல்குறிச்சி பஞ்., அணைக்கட்டு காட்டு கொட்டாயை சேர்ந்தவர் மும்மூர்த்தி, 32; இவரது சகோதரர் வரதராஜ், 30; இவர்கள் இருவரும் குடும்பத்துடன், 2 கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று இரவு, 7:00 மணியளவில், 2 கூரையிலும் தீ பிடித்து எரிந்தது.
இதில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணம், நகை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, கல்லுாரி சான்றிதழ்கள், துணிகள், மளிகை பொருட்கள், பீரோ, கட்டில், சைக்கிள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன.
மேலும், அருகிலிருந்த ஆட்டு கொட்கையிலும் தீ பரவியதில், 6 ஆடுகள் கருகின. பேளுக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
மலேசியாவில் வசித்தவர்
அரசு பஸ் மோதி பலி
பனமரத்துப்பட்டி, ஜன. 29-
நாமக்கல் மாவட்டம் வையப்பமலையை சேர்ந்தவர் குமரவேல், 42. இவர் குடும்பத்துடன், மலேசியா நாட்டில் வசித்தார். அங்கிருந்து குமரவேல், அவரது மனைவி ராஜேஸ்வரி, 40, மகன் தீபன், 21, ஆகியோர் சேலம் வந்தனர். சொந்த ஊரான வையப்பமலைக்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தனர்.
நேற்று காலை, 5:30 மணிக்கு, சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் நிலவாரப்பட்டி அருகே சென்றபோது சாலை தடுப்பில் ஆட்டோ மோதி கவிழ்ந்தது. அப்போது, சேலத்தில் இருந்து கொல்லிமலை நோக்கி சென்ற அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது. அதில் காயமடைந்த மூவரும், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு குமரவேல் உயிரிழந்தார். மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பிரசன்ன வெங்கட்ரமண
கோவில் தேர்த்திருவிழா
ப.வேலுார், ஜன. 29--
பரமத்தி வேலுார் தாலுகா, பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த, 20ல் கொடியேற்று விழா நடந்தது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நேற்று காலை, 4:00 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை, 4:00 மணிக்கு வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் எம்.எல்.ஏ., சேகர் தலைமை வகித்து, தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார்.
இன்று பள்ளக்கு உற்சவமும், மாலை, 3:00 மணிக்கு வராஹ புஷ்கரணியில் தீர்த்தவாரி சக்கராஸ் நானமும், இரவு கஜலட்சுமி வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
டூவீலர்கள் மோதி
ஒருவர் படுகாயம்
குமாரபாளையம், ஜன. 29-
குமாரபாளையம்-சேலம் சாலை, பெட்ரோல் பங்க் எதிரே, பழக்கடை நடத்தி வருபவர் சிவபிரகாசம், 65; இவர், நேற்று முன்தினம் காலை, 10:30 மணியளவில், 'ஹோண்டா டியோ' டூவீலரில், தமிழ்நாடு விடுதி அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த, 'ஹீரோ ஸ்பிளண்டர்' டூவீலரில் வந்த நபர் மோதியதில் சிவபிரகாசம் பலத்த காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் மீட்டு, பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
'நாமக்கல் கவிஞருக்கு
மார்பளவு வெண்கல சிலை'
நாமக்கல், ஜன. 29-
'நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் நினைவு இல்லத்தில், அவரது வெண்கல சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும்' என, சிலை அமைப்புக்குழுவினர், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் கவிஞர் ராமலிங்கனாரின், நினைவு இல்லத்தில் காலியாக உள்ள இடத்தில், அவரது மார்பளவு வெண்கல சிலை நிறுவ, சிலை அமைப்பு குழுவுக்கு அனுமதி வழங்க வேண்டும். இந்த சிலைக்கும், பீடத்துக்கும் அமைக்க ஆகும் செலவுகளை, நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் சிலை அமைப்புக்குழுவே ஏற்றுக் கொள்ளும். மேலும், சிலை திறப்பு விழாவின் போது, சிலை அமைப்புக்குழு, கவிஞரின் சிலையை, அவரது நினைவு இல்லத்துக்கே ஒப்படைத்து விடுகிறோம். சிலையை பராமரிக்கும் பொறுப்பும் எங்களை சார்ந்தது.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர். மது விற்றவர் கைது
குமாரபாளையம், ஜன. 29-
குமாரபாளையம் வட்டமலை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக, குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
எஸ்.ஐ., மலர்விழி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடை அருகே மது விற்பனை நடந்து வந்தது.
அங்கு சென்ற போலீசார் மது விற்ற நபரை பிடித்து, அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த பெருமாள், 49, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.
ரூ.60 ஆயிரத்துக்கு
தே.பருப்பு ஏலம்
மல்லசமுத்திரம், ஜன. 29--
மல்லசமுத்திரத்தில் நடந்த ஏலத்தில், 60 ஆயிரம் ரூபாய்க்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நடந்த ஏலத்தில், விவசாயிகள், 20 மூட்டைகளில் தேங்காய் பருப்புகளை கொண்டு வந்தனர். முதல் தரம், 73.40 முதல் 81.65 ரூபாய், இரண்டாம் தரம், 52.75 முதல் 63.55 ரூபாய் என, 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.